ஆயர் விக்டர் ஞானப்பிரகாசம் காலமானார்!


 பாகிஸ்தான் குவேற்றா மறைமாவட்டத்தின் ஆயர் பேரருட் கலாநிதி விக்டர் ஞானப்பிரகாசம் (அமதி – 80 வயது) ஆண்டகை கடந்த 12ம் திகதி பாகிஸ்தானில் மாரடைப்பால் காலமானார்.

15ம் திகதி பாகிஸ்தானில் இடம்பெற்ற அவரது இறுதி நிகழ்வில் பாகிஸ்தான் ஆயர்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையில் யாழ்ப்பாணம் – பாஷையூரில் 1940/11/21 பிறந்த இவர், தனது பாடசாலைக் கல்வியை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நிறைவு செய்தார். குருத்துவம் நுழைந்து களுத்துறையில் 1959ம் ஆண்டு தனது முதலாவது நித்திய வாக்குறுதியை அளித்ததுடன், கண்டி இலங்கை அன்னை தேசிய குருத்துவக் கல்லூரியில் தனது மெய்யியல், இறையியல் கல்வியை நிறைவு செய்து 1966ம் ஆண்டு அமலமரி தியாகிகள் சபையின் குருவாக திருப்பொழிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இலங்கையில் பல இடங்களில் பணியாற்றிய பின் 1973ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இவர், பாகிஸ்தானில் 47 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். 1979 – 1985 வரை பாகிஸ்தானில் அமலமரி தியாகிகள் சபையின் மேலாளராகவும், 2001ம் ஆண்டு முன்னாள் திருத்தந்தை புனித 2ம் அருளப்பர் சின்னப்பரால் பாகிஸ்தான் குவேற்றா பிரதேச அப்போஸ்தலிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டார், 2010ம் ஆண்டு ஏப்ரலில் புதிதாக உருவாக்கப்பட்ட குவேற்றா மறைமாவட்டத்தின் முதலாவது ஆயராக முன்னாள் திருத்தந்தை 16ம் ஆசீர்வாதப்பரினால் நியமிக்கப்பட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெறுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ்ஸிடம் கோரிய போதிலும் தாெடர்ந்தும் ஆயராக பணியாற்றுமாறு திருத்தந்தையால் கோரப்பட்ட நிலையில் மரணிக்கும் வரை குவேற்றா மனறமாவட்ட ஆயராக விக்டர் ஞானப்பிரகாசம் பணியாற்றினார்.

2013ம் ஆண்டு இவர் வசிக்கும் இல்லத்திற்கு அருகே பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் காயமடைந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.