வைத்திய நிபுணர்கள் இருவருக்கு பேராசிரியர்களாக பதவியுயர்வு!


 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட வைத்திய நிபுணர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ், 2019ம் ஆண்டும், குழந்தை நல மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2019ம் ஆண்டும் பேராசிரியர் பதவியைப் பெற்றிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்க யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை இன்று (19) ஒப்புதல் வழங்கியது.

இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ கலாநிதி பட்டம் பெற்று, அதே பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக பதவி பெற்ற இரண்டாவது பேராசிரியர் என்ற பெருமையை சத்திரச் சிகிச்சை வல்லுநர் எஸ்.ரவிராஜ் பெற்றுள்ளார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சைத் துறையில் 2010ம் ஆண்டு முதல் முதுநிலை விரிவுரையாளராக நியமிக்கப்பட்டதுடன் 2012ம் ஆண்டு அந்தத் துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு செப்ரெம்பர் 14ம் திகதி தொடக்கம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார்.

இதேவேளை பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்த குழந்தை மருத்துவ வல்லுநர் திருமதி கீதாஞ்சலி சத்தியதாஸ், 2003ம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தை மருத்துவத் துறையில் விரிவுரையாளராகப் பதவி பெற்றார். அதன் பின்னர் அவர் 2010ம் ஆண்டு முதல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட குழந்தைகள் மருத்துவத் துறையின் முதுநிலை விரிவுரையாளராகப் பதவி உயர்வு பெற்று சேவையாற்றி வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பேராசிரியர் தெரிவுக்கான சகல தேவைப்பாடுகளையும் நிறைவு செய்துள்ள நிலையில் நடத்தப்பட்ட மூன்று நிலை நேர்முகத் தேர்வுகளிலும் தேறி, பேராசிரியர்களாக பதவியுயர்வு பெற்றிருக்கிறார்.

இதன்படி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக் கூட்டத்தில் இருவருக்கும் பேராசிரியர் பதவி வழங்கப்பட்டுள்ளமை இன்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இந்த ஆண்டு மூன்று மருத்துவ வல்லுநர்களுக்கு பேராசிரியர் பதவி வழங்கி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.