குமார் ரட்ணம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமனம்!!

 


மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக திரு. பிரபாகரன் குமாரட்ணம் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ  முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தார்.

கண்டி மாவட்டத்தின் புஸ்ஸல்லாவ நகரில் பிறந்த இவர். தலவாக்கலை, தேவிசிறிபுரவில் வசித்த திரு.குமாரரட்ணம் மற்றும் காலஞ்சென்ற லீலாவதி ஆகியோரின் கனிஸ்ட புதல்வராவார்.

புஸல்லாவ பரிசுத்த திருத்துவக்கல்லூரியில் ஆரம்பக்கல்வியையும், தலவாக்கலை சுமண மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வியையும் கற்ற இவர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று கொழும்புப்பல்கலைக்கழக சட்டப்பீடத்திற்கு தெரிவாகி சட்டஇளமாணிப்பட்டத்தை பெற்றதுடன் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற சட்டத்தரணியாகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதன்பின்னர் காலஞ்சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஊ மோதிலால் நேருவின் கனிஸ்ட சட்டத்தரணியாகப் பணியாற்றினார்.

கல்வியில் மாத்திரமின்றி 1990/1991 ஆண்டுகளில் கொழும்பு பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியின் தலைவராகவும் விளங்கிய பெருமையும் இவரைச் சாரும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம், குற்றவியல் நீதி, சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றைப்பயின்று தனது சட்டமுதுமாணிப்பட்டத்தை நிறைவு செய்ததுடன் பீஜித்தீவு நீதிமன்றங்களில் பரிஸ்ரராகவும் (Barrister) சொலிசிற்றராகவும் (Solicitor) பதவிப்பிரமாணம் பெற்றுள்ளார்.

1995ஆம் ஆண்டு சட்டமாஅதிபர் திணைக்களத்தில் அரச சட்டவாதியாக இணைந்து கொண்ட திரு. பி.குமாரட்ணம், தனது மும்மொழி ஆற்றலாலும், விடாமுயற்சியாலும் 2005ஆம் ஆண்டு சிரேஸ்ட அரச சட்டவாதியாகவும், 2014ஆம் ஆண்டு பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் 2018ஆம் ஆண்டு சிரேஸ்ட பிரதி சொலிசிற்றர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் கடமையாற்றிய காலப்பகுதியில் மோட்டார் போக்குவரத்துப்பிரிவு, பொதுமக்கள் பிராதுப்பிரிவு, சிறுவர்களுக்கெதிரான துஸ்பிரயோகப்பிரிவு, குடியவரவு மற்றும் குடியகல்வுப்பிரிவு ஆகிய பிரிவுகளை மேற்பார்வை புரிந்ததுடன் வடக்கு, கிழக்கு, களுத்துறை மற்றும் நீர்கொழும்பு மேல்நீதிமன்ற வலயங்களை மேற்பார்வை செய்யும் பணியையும் செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

இவர் நாடளாவிய ரீதியில் நீதிவான் நீதிமன்றம் முதற்கொண்டு உயர்நீதிமன்றம் வரை பல நீதிமன்றங்களிலும் தோன்றி ஆயிரக்கணக்கான வழக்குகளில் தன் வாதத்திறனால் நீதியை எட்ட வழிசமைத்துள்ளார்.

பொலிஸ் திணைக்களம், மதுவரித்திணைக்களம் உள்ளிட்ட பல திணைக்களங்களுக்கு பயிற்சிக் கருத்தரங்குகளை வழங்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டு இவரது பெயர் ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பிரபல்யமாகப் பேசப்பட்டது. 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்யா சிவலோகநாதன் வழக்கில் யாழ்ப்பாணத்தில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் தீர்ப்பாயத்தில் (Trial at Bar) தோன்றி எண்மருக்கு மரணதண்டனையை பெற்றுக் கொடுத்த பெருமையையும் இவரையே சாரும்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் சிறப்பு வழக்குத்தொடுநராகத் தோன்றியதுடன் மட்டக்களப்பு மயிலந்தனை படுகொலைகள் வழக்கிலும் கனிஸ்ட சட்டவாதியாகத் தோன்றியுள்ளார்.

உள்நாட்டில் மாத்திரமின்றி வெளிநாட்டிலும் தனது சேவையை ஆற்றியுள்ளார். 2012 – 2014 வரையான காலப்பகுதியில் பீஜித்தீவின் மேல்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் நீதிபதியாகக் கடமையாற்றி முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டளைகளையும், தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார்.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதகாலப்பகுதியில் பீஜித்தீவின் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.

2000ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வின் பரீட்சகராகவும் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக்கல்லூரியின் சட்டமாணவர்களின் பரீட்சகராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவர் சுதர்சனி குமாரரட்ணத்துடன், மணவாழ்வில் இணைந்து மிதுசனா, தக்சனா ஆகிய இரு புதல்விகளும் உள்ளனர்.

திரு.பி. குமாரரட்ணம், சட்டமாஅதிபரால் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவிற்கு உதவிபுரிய பல்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவாதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற கருத்தரங்குகள், சர்வதேச சட்ட மாநாடுகள், பயிற்சிகளில் பங்கேற்று தனது கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பல சட்டவாதிகளுக்கும் வழிகாட்டியாகத்திகழ்ந்ததுடன் பயிலுனர் சட்டத்தரணிகள் பலருக்கும் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவியேற்று தன் புகழாரத்தை நீதித்துறையிலும் பதித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.