உண்ணும் உணவு முதல் உடலுக்கு போடும் சவர்காரம் வரை நஞ்சு!


 தொற்று நோயினால் உயிரிழப்பவர்களைவிட தொற்றா நோயினால் உயிரிழப்பவர்களே அதிகமாகும். உண்ணும் உணவுகள் முதல் உடலுக்கு போடும் சவர்காரம் வரையில் நஞ்சு இரசாயனங்களால் கலக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம். பொது விடயத்தில் எல்லோரும் ஒன்றாகி ஆரோக்கியமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முன்வர வேண்டுமென கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருந்து கண்டு பிடிக்கப்படாத தொற்றுக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை விடவும் தொற்றா நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். கொவிட்19 தொற்றால் உயிரிழப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொற்றா நோய்களுக்கு இலக்காகியிருப்பவர்களே ஆகும்.

இதன்மூலம் தொற்று நோயை விடவும் தொற்றாநோய் அபாயமானது என்பது தெளிவாகின்றது.

15 வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக நோய் முதியவர்களுக்கே இருந்தது. ஆனால் இன்று அது சிறு பிள்ளைக்கும் இருக்கின்றது. அதேபோன்று புற்றுநோயும் இருக்கின்றது. '

2000 ஆம் ஆண்டில் புற்றுநோயினால் வருடத்திற்கு 8,000 பேர் இறந்த நிலையில் 2013 ஆம் ஆண்டளவில் வருடத்திற்கு 13,000 பேர் இறக்கும் நிலைமை உருவாகியுள்ளது. இதேவேளை நீரிழிவு, இரத்த அழுத்த நோய்களும் அதுபோன்று உயிரை பறிக்கும் நிலையில் இருக்கின்றது.

தற்போது நாட்டில் இடம்பெறும் மரணங்களில் 70 வீதமானவை தொற்றா நோய்கள் மூலமே ஏற்படுகின்றது. இந்த நோய்கள் அதிகரிக்க காரணம் என்ன? நாங்கள் சுகாதார துறையை உயர்த்தினாலும் இந்த கேள்விகளுக்கு பதில் கூறாது மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

இப்போது எமது நாட்டில் பொதுச் சுகாதார துறைக்கு ஒதுக்கும் நிதியில் 70 வீதமானவை தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்காகவே ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நோய்கள் மக்களின் உணவு பழக்க வழக்கங்களுடனும் தொடர்புடையதே, வர்த்தக சந்தை சக்திகளினால் உணவு பொருட்களில் பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். இது உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகின்றன.

உண்ணும் நூடில்ஸ் முதல் உடலுக்கு போடும் சவர்காரம் வரையில் இரசாயன கலப்புகளே உள்ளன. வர்த்தக சந்தை சக்திகள் இலாபத்தை நோக்கியே செல்கின்றன. இந்நிலையில் நாம் பொது விடயத்தில் எல்லோரும் ஒன்றாகி ஆரோக்கியமான உணவுகளை மக்களுக்கு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முன்வர வேண்டும் என்றார்.

அமைச்சர் விமல் வீரவன்ச

Blogger இயக்குவது.