யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42,000 பேரின் பெயர்கள் நீக்கம்!!


 2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து 42 ஆயிரத்து 234 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

வலிகாமம் வடக்கில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் இம்முறை மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டமை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

2019 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டனர். அதிலிருந்து 42 ஆயிரத்து 234 பேர் நீக்கப்படவுள்ளனர். 33 ஆயிரத்து 211 பேர் சேர்க்கப்படவுள்ளனர்.

போரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வாக்காளர் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்யப்பட்டிருக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் மீளாய்வு செய்யப்பட்டபோது 4 லட்சம் பேரின் பெயர்கள் அதிலிருந்து நீக்கப்பட்டன.

அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றது. எனினும் வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகள் இந்த மீளாய்வில் சேர்க்கப்படுவதில்லை.

2019ஆம் ஆண்டு வாககாளர் பெயர் பட்டியல் மீளாய்வுக்குட்படுத்தப்பட்டபோது, வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத கிராம அலுவலர் பிரிவுகளை மீளாய்வுக்குள் உட்படுத்துவது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உள்நாட்டில் இருந்தாலும், வெளிநாட்டில் இருந்தாலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகச் சிறப்பு விண்ணப்பப் படிவமும் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் அரசியல் அழுத்தங்களால், இறுதித் தருணத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது. எனினும் இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.

2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் மீளாய்வில் மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளும் உட்படுத்தப்பட்டன.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை நடந்த ஏதாவது ஒரு தேர்தலில் நாட்டின் எந்த இடத்தில் வாக்களித்திருந்தால் அவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை.

அவ்வாறு அல்லாத 21 ஆயிரத்து 905 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

2010ஆம் ஆண்டுக்குப் பினனர் ஒவ்வொரு ஆண்டும் ஆகக் குறைந்தது 7 ஆயிரம் பேரால் யாழ்ப்பாண மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

தற்போது 9 ஆயிரம் பேரால் வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தேர்தலில் ஆசன எண்ணிக்கை மற்றும் பல்கலைக் கழக அனுமதி என்பவற்றில் தாக்கம் செலுத்தும்.

இந்தப் பெயர் பட்டியல் பெப்ரவரி முதலாம் திகதி இறுதி செய்யப்படும். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவோர் மற்றும் சேர்க்கப்படுவோரின் விவரங்கள் காட்சிப்படுத்தப்படும்.

அது தொடர்பான ஆட்சேபனைகளை உரிமைக் கோரிக்கைப் படிவங்கள் ஊடாகக் கையளிக்க முடியும் என்று யாழ்ப்பாணம் மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கி.அமல்ராஜ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.