ஜோசப் பரராஜசிங்கத்தைக் கண்டதே கிடையாது- பிள்ளையான்!
ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை கண்டதே கிடையாது எனவும் அவரை ஒரேயொரு முறை தூரத்தில் இருந்து பார்த்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
அத்துடன், பல அசிங்கங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்தியபோது அதனைக் கண்டுகொள்ளாதவர்கள் இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக குரல்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் ஜோசப் பரராஜசிங்கம் என்பவரைக் கண்டதே கிடையாது. ஒரேயொரு தடவை தூரத்தில் இருந்து பார்த்துள்ளேன். இவ்வாறான நிலையில் அவரைக் கொலை செய்ததாக வீண்பழியைச் சுமத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னை சிறையில் அடைத்தது.
ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். விடுதலைப்புலிகள் அன்றைய காலத்தில் வெற்றிபெற்றவர்களைக் கொலை செய்துவிட்டு வேறு நபர்களை நியமனம் செய்தது. அதில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அது தொடர்பாக எவ்வித விசாரணைகளும் செய்யப்படவில்லை.
நாளை தைப்பொங்கல் தினமாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள், அந்தவகையில் நீதித் துறையினுடைய எனக்கான அறிவிப்பு வந்துள்ளது. இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் என்னுடைய வழக்கிலிருந்து என்னை முழுதாக விடுவித்து விடுதலை செய்துள்ளது.
என்னை சிறையில் அடைத்து, நசுக்கி முன்னாள் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் இருந்தபோது இதனைச்செய்தார்கள். 2015ஆம் ஆண்டு வந்த நல்லாட்சி அரசாங்கம் தங்களோடு நின்றவர்களுக்கு வழங்கிய பரிசாக இதனைச்செய்தார்கள்.
ஜோசப் பரராஜசிங்கம் என்பவரை நான் கண்டதே கிடையாது. முறக்கொட்டாஞ்சேனையூடாக வந்துகொண்டிருக்கும்போது ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அதில் தூரத்தில் இருந்தபோது அவரை ஒரு தடவை கண்டேன். அவருடன் எந்தவிதமான அரசியல் விரோதங்களும் எனக்கு இல்லை.
ஜோசப் பரராஜசிங்கம் 2005இல் மரணிக்கும்போது நான் அரசியலில் இருக்கவும் இல்லை. அரசியல் செய்யும் எண்ணமும் இல்லை. அரசியலுக்கான எந்த முயற்சியும் எடுத்தவனும் அல்ல. 2008இல் தான் நான் மாகாண சபையில் போட்டியிட்டேன். அந்த வேளையில்தான் எனது முதலாவது வாக்கினைக்கூட செலுத்தினேன்.
அக்கிரமம் செய்து அரசியலுக்கு வரவேண்டிய தேவைப்பாடு எமக்கு இருக்கவில்லை. ஆனாலும் தமிழ் தேசியவாதிகள் எனபவர்கள் என்னை கிழக்கில் வளரவைத்தால் அவர்களின் அரசியல் அழிந்துவிடும், யாழ்ப்பாணத்தில் இருந்துவந்து இங்கு தேர்தல் கேட்கமுடியாது என நம்பியவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இயற்குவதற்குத் துணையாக நின்ற பிதாமக்கள். அவர்களின் வாரிசுகளாக இருந்தவர்களைக் கொண்டு நல்லாட்சியை உருவாக்கி அவர்கள் ஊடாக என்னை சிறையில் அடைத்தார்கள்.
பல அசிங்கமான செயற்பாடுகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டது. யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சட்டம், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதிகள் தடுத்துவைக்ககூடாது என்று குரல் கொடுக்கின்றார்கள்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை உருவாக்கிய பிதாமக்கள் என்னை மட்டும் தண்டிக்கவேண்டும் மற்றவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று இரட்டை முகத்தினைக் காட்டுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை