இரகசியங்கள்குருந்தூர் மலை தொடர்பான வெளியானது!

 



குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஆறுமுகத்தான் குளம், போன்ற இடங்களில் உள்ள வயது முதிர்ந்தவர்களுடன் பேசியதில், இந்த குருந்தூர்மலையானது எமது வழிபாட்டு இடங்களைக்கொண்டதெனவும், அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது நிச்சயமாக எமது வழிபாட்டு அடையாளங்கள் வெளிப்படும் எனவும் தெரிவித்ததாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்களும் காணாமல் ஆக்கப்பட்டிருந்தன. குறிப்பாக எமது மக்கள் குருந்தூர் மலையிலே இறுதியாக கடந்த 01.10.2020 அன்று பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளும்போது அங்கு தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் அங்கு இருந்தன.

இந் நிலையில் 10.09.2020 அன்று தொடக்கம் குருந்தூர் மலையில் தொல்லியல் திணைக்களத்தின் வேண்டுகோளின்படி அங்கு படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறிருக்க கடந்த 27.01.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அடங்கிய குழுவோடு நாம் குருந்தூர் மலைக்குச் சென்று பார்த்தபோது தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் அங்கு இருந்திருக்கவில்லை.

அந்தவகையில் இவ்வாறு தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பிலே முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினையும் மேற்கொண்டுள்ளோம். இது தொடர்பிலே வழக்குத் தொடர்வது சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனோடு கலந்தாலோசித்து அதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வாறிருக்க அங்கு இடம்பெறும் அகழ்வாராய்ச்சிகளில் எமது மத அடையாளமாக எண் முக தாரா லிங்கம் வெளிப்பட்டிருக்கின்றது. குறிப்பாக குமுழமுனை, தண்ணிமுறிப்பு, ஆறுமுகத்தான் குளம், போன்ற இடங்களில் காணப்படுகின்ற வயதுமுதிர்ந்தவர்களுடன் பேசியதில், இந்த குருந்தூர்மலையானது எமது வழிபாட்டு இடங்களைக்கொண்டதெனவும், அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது நிச்சயமாக எமது வழிபாட்டு அடையாளங்கள் வெளிப்படும் எனவும் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு அவ்வாறு அகழ்வாராய்ச்சியில் வெளிப்படும் எமது அடையாளங்களை தொல்லியல் திணைக்களத்தினர் மறைப்பதற்கு முற்படுவார்கள் எனவும், எனவே இந்த அகழ்வாராய்ச்சியில் தமிழர்களும் இணைத்துக்கொள்ளப்படவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையிலே அகழ்வாராய்ச்சியில் அங்கு வெளிப்பட்டிருக்கும் லிங்கமானது, எண்முக தாரா லிங்கம் என ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். அந்தவகையிலே ஆய்வாளர்களுடைய கருத்துக்களின்படி குருந்தூர் மலை தமிழர்களுடையது என்பது வெளிப்படையாகின்றது எனவும் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.