உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கை எம்மிடமே கையளிக்கப்பட வேண்டும்!


நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் சாரம்சத்தை எம்மிடமே வழங்க வேண்டுமென பொதுபலசேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் ஊடக செயலாளர், ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் பொதுபல சேனா அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது, “இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் கடந்த 2019.04.21 ஆம் திகதி நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் குறித்து  விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுபல சேனா அமைப்பு மற்றும் ஞானசார தேரருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதான  ஊடக சேவை தலைப்புச் செய்தியில் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை  ஆணைக்குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு மாத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ இதுவரையில் வழங்கப்படவில்லை. எமது அமைப்பு குறித்து அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளமை பொதுபல சேனா அமைப்பிற்கு இழைக்கும் அநீதியாகவே கருத முடியும்.

மேலும் பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் பிரதான ஊடகத்தில் வெளியாகியுள்ள  செய்தியை ஆணைக்குழுவின் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாகவே  குறித்த ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தகவல், மக்கள் மத்தியில் மாறுப்பட்ட கருத்தினை தோற்றுவித்துள்ளது.  ஆகவே இவ்விடயம் தொடர்பாக எமது அமைப்பின் சார்பில் சாட்சியங்களை பெறுவது அவசியமாகும்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.