பயங்கரவாத்தை எதிர்க்க பாகிஸ்தானுடன் ஒன்றிணைவோம்!


பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து போராட வேண்டும் என இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள, பாகிஸ்தான் பிரதமருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் உரையாற்றுபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வரும் முதல் அரச தலைவராக நீங்கள் கருதப்படுகின்றீர்கள். எனது அழைப்பினை ஏற்று வைரஸ் தாக்கத்தின் சவாலுக்கு மத்தியில் நீங்கள் இலங்கைக்கு நட்புடன் வருகை தந்துள்ளீர்கள்.

நீங்களும், உங்கள் நாட்டு மக்களும் இலங்கை மீது கொண்டுள்ள பற்றினை தற்போதைய விஜயம் உறுதிப்படுத்தியுள்ளது. பல சவால்களுக்கு மத்தியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை தீர்க்கமான நேரத்தில் தைரியமாக தீர்மானம் எடுக்கும் மனோபாவத்தையும், அரச தலைவருக்கான ஆளுமை பண்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

அடிமட்ட மக்களுக்காக அரச நிர்வாகத்தை முன்னெடுப்பது உங்களின் கொள்கையாகவும் எங்களின் அரசாங்கத்தின் கொள்கையாகவும் காணப்படுகிறது. இடம்பெறவுள்ள தேர்தலில் நீங்களும், உங்கள் அரசாங்கமும் வெற்றிபெற இலங்கை சார்பில் முற்கூட்டிய வாழ்த்துக்கள்!

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவைத் தொடர்ந்து சிறந்த முறையில் பேணுவது அவசியமாகும். வர்த்தக முதலீட்டாளர்களுடன் நாட்டுக்கு வருகை தந்துள்ளமையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். பொருளாதார முன்னேற்றத்தில் அரச மற்றும் தனியார் முதலீடுகள் அவசியமானதாகும்.

2017 ஆம் ஆண்டும், ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு சாதகமான தன்மையில் இருந்தது. இரண்டு முறை மேற்கொண்ட விஜயத்தை மறக்க முடியாது. இரு நாடுகளுக்கும் இடையில் சுற்றுலா மற்றும் விமான சேவை துறைகளின் செயற்பாட்டை அதிகரிக்கவும் நாம் இணக்கம் தெரிவித்துள்ளோம்.

பாகிஸ்தானின் புரதான பௌத்த பாரம்பரியத்தை இலங்கையர்கள் பார்வையிடுவதை சாத்தியமாக்கிய பாகிஸ்தான் அரசுக்கு நாங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தெற்காசியாவின் நிலையான அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைவதற்கு அரசியல் ஸ்திரத்தன்மையும் பிராந்திய அமைதியும் முக்கியமாகும் என இலங்கை நம்புகின்றது.

எமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் ஒரு முக்கிய அங்கமான வறுமை மற்றும் சமூக- பொருளாதார சமத்துவமின்மையைப் போக்குவதற்கு பிரதமர் இம்ரான் கான் முன்னெடுக்கும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் தொடர்ச்சியாக ஒன்றிணைந்து செயற்படுவோம். மேலும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகம், ஆயுதக் கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க உரிய முகவர் நிறுவனங்கள் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு தற்போதைய பொறிமுறைகளுடன் முன்னோக்கிச் செல்வதற்கு நாம் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம்.

இதேவேளை, விளையாட்டுத் துறைக்கான ஒத்துழைப்பு மற்றும் நாட்டின் விளையாட்டுப் பயிற்சி வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆதரவளித்தமைக்கு பாகிஸ்தானுக்கு நன்றி கூறுகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.