ஐ.நா. அறிக்கைக்கான பதிலளிப்பு குறித்து தயான் ஜயதிலக கருத்து!

 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை பற்றிய மீளாய்வு அறிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அளித்துள்ள 30 பக்கங்களைக் கொண்ட பதிலளிப்பானது, அவருடைய சகோதரரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) பரிந்துரைகளுக்கு முற்றாக முரணானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


ஐ.நா.வுக்கான முன்னாள் வதிவிடப் பிரதிநிதியும், இராஜதந்திரியும் ஐக்கிய மக்கள் சக்தியின் சர்வதேச உறவுகளுக்கான சிரேஷ்ட ஆலோசகருமான கலாநிதி. தயான் ஜயதிலக இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.


இந்நிலையில், அந்த அறிக்கையை முழுமையாக நிராகரிப்பதாக, இலங்கை அரசாங்கம் 30 பக்கங்களினான எழுத்துமூல அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது.


இந்நிலையில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயத்திலக, “26 வருடகால ஆயுத முரண்பாடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்காகவும் சில சம்பவங்கள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையுடன் பொறுப்புக் கூறுவதற்காகவும் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக பதவி வகித்தபோது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையில் 2010ஆண்டு நியமித்திருந்தார்.


இந்தக் குழுவானது, பல்வேறு விடயங்கள் தொடர்பாக கவனம் செலுருத்தியிருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் திகதி தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடத்தில் சமர்பித்திருந்தது. அந்த அறிக்கை அதே ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி பகிரங்கப்படுத்தப்பட்டது.


இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களைப் படிப்படியாக முன்னெடுப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விரும்பியிருந்தபோதும், அவரைச் சூழ இருந்தவர்கள் அதற்கு இடமளித்திருக்கவில்லை.


அந்தப் பரிந்துரைகளைப் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாகத் தேவையற்ற சர்வதேச தரப்புக்களின் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அற்றுப்போயிருக்கும் என்ற விடயத்தினை நான் ஜெனிவாவிலிருந்து திரும்பியதும் மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறியிருந்தேன்.


துரதிஷ்டவசமாக அந்த விடயங்கள் எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் காட்டமான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்நிலையில், அவருடைய இலங்கை பற்றி மீளாய்வு அறிக்கையை நிராகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டு 30 பக்கங்களில் எழுத்து மூலமான பதிலை அளித்துள்ளது. இதுவொரு தவாறான அணுகுமுறையாகும்.


கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் போரில் ஈடுபட்ட இரு தரப்பினரினதும் குற்றங்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, பல்வேறு விடயங்களுக்கு உள்நாட்டிலேயே தீர்வுகளை எட்டக்கூடிய வகையிலான பரிந்துரைகளும் காணப்படுகின்றன.


இந்நிலையில், அவ்விதமான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை நடைமுறைப்படுத்தவது என்ற கருத்தினை சர்வதேசத்திற்கு முன்வைப்பதன் மூலம் பல்வேறு நெருக்கடிகளைத் தவிர்த்திருக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்கள் அதனைச் செய்யவில்லை.


தற்போது, கோட்டாபய அரசாங்கம் அந்தப் பரிந்துரைகளை முழுமையாக மறுதலிக்கும் வகையில் ஐ.நா. உயர்ஸ்தானிகருக்கான தமது பதலளிப்பைச் செய்திருகின்றது. இதன்மூலம், மஹிந்தவினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது.


கோட்டாபய அரசாங்கமானது மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு முனையவில்லை. அவ்வாறு முனைந்திருந்தால் கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளைப் புறமொதுக்கியிருக்காது. இப்போது அனைத்து வாயில்களையும் அதுவே மூடிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.