எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் பிறந்தநாள்

 


தந்தை செல்வா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும்... எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள்

பிறந்தநாள் - 31.03.1898 -' 31.03.2021


இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடியவரும், தமிழரசுக் கட்சியின் நிறுவுனரும், அதன் தலைவருமான தந்தை செல்வா என அனைவருக்கும் அறிமுகமான எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் பிறந்ததினம் இன்று– 31.03.2020

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் இவர் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதராகவும், காலத்தால் அழியாத பதிவாகியும் மரணத்தின் பின்னும் இன்றும் வாழ்பவர்.ஒரு குடிசார் வழக்கறிஞரான (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) இவர், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.


இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.


இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 1950 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.


சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.


தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழர்களை அடக்கி ஆழலாம் என நினைத்த சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.


தமிழர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமே இன்றும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என அழைக்கப்படுகிறது.


இதன் பின் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. தந்தை செல்வா அவர்கள் கூறிச் சென்ற முக்கிய வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது “அகிம்சை வழியில் போராடும் தமிழர்களுக்கான விடுதலையை தர சிங்கள அரசு மறுத்தால் எமக்கு அடுத்த இளைய சந்ததியினர் ஆயுதம் கொண்டு மீட்டெடுக்க நேரிடும்” என சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தவர் தந்தை செல்வா அவர்கள்.


அவர் அன்று கூறியதோ போலவே தமிழர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழீழ தனியரசை உருவாக்கவும் என சில இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்குள் குதித்தனர். இருந்தும் ஒழுக்கம் இன்மை, சரியான தலைமைத்துவம் இன்மை, என்பவற்றால் சிதைந்து அழிந்துபோக தமக்கே உரித்தான கட்டுப்பாடு, ஒழுக்கம், இலட்சியம், தியாகம் எனும் உயரிய பண்புகளோடு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆயுதவழிப் போராட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாக “புலிகள்” அமைப்பு திகழ்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.