சாலப் பொறுத்தமானவர் “சாரதி” சிந்தக்க!


 தென் ஆபிரிக்க லெஜென்ட்ஸ் அணிக்கெதிரான வீதி பாதுகாப்பு அரையிறுதிப் போட்டியில் சிந்தக்க ஜயசிங்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டதுடன் முழு கிரிக்கெட் உலகையும்  தன்பக்கம் ஈர்க்கச் செய்தார்.

நேற்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில், சிந்தக்க ஜயசிங்க தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக 25 பந்துகளில் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை குவித்திருந்தார்.

அண்மையில் அவுஸ்திரேலியாவில் பஸ் ஓட்டுநராக சுராஜ் ரந்தீவுடன், சிந்தக்க ஜயசிங்க புதிய தொழிலில் கால்பதித்திருந்தமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஓர் விடயமாகும்.

வீதி பாதுகாப்பு கிரிக்கெட் தொடருக்கு சிந்தக்க ஜயசிங்க சரியான தூதுவர் என்பது சாலப்பொருந்தமானது. ஏனெனில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தென்றில் படுகாயமடைந்திருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வழமையாக செலுத்தும் பயணிகள் பஸ்ஸை மோதி விபத்திற்குள்ளாகச் செய்ததிலேயே படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார்.

விபத்தில் ஏற்பட்ட காயங்கள் கடுமையாக இருந்ததால் இடுப்பிற்கு கீழ் செயலிலழக்கும் நிலையில் இருந்தார். அவரது கழுத்தும் பின்பகுதியும் பலமாக தாக்கப்பட்டதால் அதிர்ச்சி நிலையில் இருந்தார். அவரது வலது கால் துண்டிக்கப்படும் தறுவாயில் காணப்பட்டது.

2000 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இந்திக்க டி சேரம், ஜீவன்த்த குலதுங்க, சிந்தக்க ஜயசிங்க ஆகிய மூவருமே தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரர்களாக திகழ்ந்தனர். இவர்கள் மூவருமே அதிரடியாக துடுப்பெடுத்தாடக் கூடியவர்களாவர்.

அக்காலத்தில் இருந்த தெரிவுக்குழுவினர் இந்த மூவரையும் தேசிய அணியில் எடுப்பதற்கு விரும்பவில்லை. ஒரு சில போட்டிகளில் விளையாட இடமளித்துவிட்டு, அவர்களை அணியில் சேர்க்காது தட்டிக்கழித்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார ஆகிய சிறந்த வீரர்கள் விளையாடிய சமகாலப்பகுதியில், சிந்தக்க ஜயசிங்க, இந்திக்க டி சேரம், ஜீவன்த்த குலதுங்க ஆகிய மூவரும் விளையாடிய காரணத்தினாலோ என்னவோ, அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை.

இதற்கு சிறந்த உதாரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான  மஹேந்திர சிங்க தோனி விளையாடி சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்திய அணியில் மாற்று விக்கெட் காப்பாளர் ஒருவர் என்ற பேச்சுக்கே இடமிருக்கவில்லை. அதாவது நாமன் ஓஜா, பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக், விரிதமன் சஹா போன்றோருக்கு தொடர்ச்சியான வாய்ப்புக்கள் கிடைக்காமல் போனமை ஒரு துரதிஷ்ட விடயமாகும்.  

இவர்கள் நால்வருமே மஹேந்திர சிங் தோனியை விடவும் வயதில் இளைவர்களாவர். இதில் தினேஷ் கார்த்திக் மற்றும் விரிதமன் சஹா இருவர் மாத்திரமே தற்போது சர்வதேச போட்டிகளில் விளையாடி வருபவர்களாவர்.

தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் சனத் ஜயசூரிய ஆட்டமிழந்தவுடன், சிந்தக்க ஜயசிங்க ஆடுகளம் நுழையும்போது, தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணித்தலைவர் ஜொன்டி ரோட்ஸ் 30 யார் வட்டத்துக்குள் களத்தடுப்பாளர்களை நிறுத்தி, ஒரு ஓட்டத்தை எடுக்கவிடாமற் செய்வார் என போட்டி வர்ணனையாளர் தெரிவித்திருந்தார். ஆனால், சிந்தக்க ஜயசிங்க தனது திறமையை உலகுக்கு காட்டி, தான் யார் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரையான காலப்பகுதிகளில் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்திய இவர்கள் மூவரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். இவர்கள் ஹொங்கொங் சிக்ஸர்கள் போட்டிகளில் விளையாடி வேகமாக ஓட்டங்களை குவித்த வீரர்கள் ஆவர். ஒருவேளை இவர்களுக்கு முறையான வாய்ப்புக்கள் வழங்கியிருந்தால் சர்வதேச தரத்திலான சிறந்த அதிரடி துடுப்பாட்ட வீரர்கள் இலங்கைக்கு கிடைத்திருப்பார்கள் என்பது உண்மை.

சிந்தக்க ஜயசிங்க இலங்கை அணிக்காக 5 சர்வதேச இருபதுக்கு - 20 போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். அதனைவிட 140 க்கும் மேற்பட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.