இராயப்பு ஜொசெப் மறைவிற்கு அரசியல் கைதிகளின் அஞ்சலி!


 மனித நேயமும் பிறர் அன்பும் மிகுந்த பெருந்தகையான இவர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களைத் தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி, ஓர் அன்னையைப் போல ஆற்றுப்படுத்தி, ஆசிர்வதித்து வந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பெருந்தகையை சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் பெற்றோர் உறவினர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

உண்மையான யேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவர் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் பேரருட் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள்.

அன்னார் தனது 80 ஆவது அகவையில் ஆண்டவர் கட்டளையின் பிரகாரம் சிந்திப்பதை நிறுத்தி நிரந்தர ஓய்வுக்குள் தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார்.

‘நீங்கள் மற்றவர்களுக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை நான் அறிந்து கொள்வேன்’ என்ற யேசுபிரானின் அருள்வாக்கிற்கு வடிவம் கொடுத்து ஒடுக்கப்பட்டவர்களினதும் திக்கற்றவர்களினதும் உண்மை குரலாகத் தேசம் தாண்டி ஒலித்த ஒரு தமிழ்ப் பற்றாளரை இன்று தமிழ் உலகம் இழந்து துயருற்று நிற்கின்றது.

வேடமணிந்து கோசமிட்டு, முதன்மை இருக்கைகளைத் தம்வசப்படுத்தி மாலை மரியாதைகளுடன் வலம் வருகின்ற வெற்றுச் சமூகப் பற்றாளர்களைப் போலன்றி, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி, நீதி நேர்மைக்காகத் துணிவோடு போராடிய அறப்போராளியாக தன் அடையாளத்தைப் பதித்து விட்டுச் சென்றிருக்கின்றார் ஆயர் பெருந்தகை.
‘பொதுப்பார்வைக்குக் காட்சிப்படுத்தும் எந்தவொரு செயல்களிலும் சாட்சியம் இருப்பதில்லை.

விளம்பரமில்லா நற்காரியங்களே ஆண்டவன் சந்நிதானத்தில் என்றும் விலை மதிப்பானவை’ என்பதற்கொப்ப சிறைக்கொட்டடிகளில் சிதைவுற்றுக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் அத்தியாவசிய விடயங்களில் அழையா விருந்தாளியாக தன் முனைப்பு கொண்டு பல நற்காரியங்களைச் செய்திருந்தார் ஆயர் அவர்கள்.

மனித நேயமும் பிறர் அன்பும் மிகுந்த பெருந்தகையான இவர், தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் அத்தனை சிறைச்சாலைகளினதும் வாசல்களைத் தரிசித்து கைதிகளின் மனங்களில் தன்னம்பிக்கையை ஊட்டி, ஓர் அன்னையைப் போல ஆற்றுப்படுத்தி, ஆசிர்வதித்து வந்திருந்தார்.

சிறைச்சுவர்களுக்குள் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஏதேனும் அல்லல் நேர்ந்து விட்டதென்று அறியக் கிடைத்தால், உடனடியாகச் செயற்பட்டு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜயலத் ஜவயர்தன அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் கவனமீட்ட என்றுமே பின் நின்றதில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அரச தலைவர், பிரதம நீதியரசர் முதற்கொண்டு, சட்டமா அதிபர், நீதி மற்றும் சட்டத்துறை சார் அதிகாரிகளையும் அரசியல் தலைவர்களையும் நேரடியாகச் சென்று சந்தித்துக் கலந்துரையாடி வந்திருந்தார்.
மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு நம்முடைய துக்கங்களைச் சுமந்தார் என்றால் மிகையில்லை.

இவ்வாறு சொற்கோவைகளுக்குள் மாத்திரம் வரையறுத்துவிட முடியாத பரந்து விரிந்த செயல் எல்லையைக் கொண்டிருந்த அதி வணக்கத்திற்கு உரியவரின் அர்ப்பணிப்புகளை இட்டு நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளமையானது, பெரும் வருத்தத்திற்குரியதே.

‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று அலுத்து ஓயாது மக்கள் பணி செய்து வந்த மரியாதைக்குரிய மகானின் பேரிழப்பினால் துயரடைந்திருக்கின்ற அத்தனை மனித இதயங்களுக்கும் தமிழ் அரசியல் கைதிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்துடன் ஆண்டகை அவர்களின் ஆத்மா பரமபதமடைய சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம். என தமிழ் அரசியல் கைதிகள் பெற்றோர் உறவினர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ள இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.