அய்யா வே.ஆனைமுத்து... காலமானார்.!!


பெரியாரின் பெருந்தொண்டர் மாபெரும் சிந்தனையாளர் அறிவுச் செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்தவர். சமூக நீதி, இட ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் இந்திய அளவில் ஒத்தக் கருத்துடைய அமைப்புகளோடும் பல்வேறுத் தலைவர்களோடும் இணைந்து முன்னெடுத்தவர். ‘சிந்தனையாளன்’ என்று தமிழிலும் ‘பெரியார் ஈரா’ என்று ஆங்கிலத்திலும் திங்கள் இதழ்களை நடத்தினார். இறுதி வரை தொடர்ந்து இயங்கினார். அவருடையப் பங்களிப்பு அளப்பரியது. 90 களின் தொடக்கத்தில் எனக்கு அறிமுகமான அய்யா ஆனைமுத்து அவர்கள் என் மீதும் என் செயல்பாடுகள் மீதும் என் படைப்புகள் மீதும் மிகவும் ஈர்ப்புக் கொண்டிருந்தார். என்னுடையக் ஓவியக் காட்சிகளுக்கு வருகை தந்திருக்கிறார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற என்னுடைய ‘திசைமுகம்: பெரியார் பன்முகத் தோற்றம்” ஓவியக் காட்சிக்கு வருகைதந்து, “ஒரு மனிதனின் சிந்தனையை முகம் மட்டுமே கண்ணாடி போல் காட்டும். இந்த நுட்பத்தைப் புரிந்த ஓவியர் புகழேந்தி பெரியாரின் பன்முக உணர்வுகளை இணையற்ற ஓவியங்களாகத் தீட்டியுள்ளார். தமிழகம், இந்தியா பிற நாடுகளில் இவ் ஓவியங்களின் சிறப்பு பரவ வேண்டும். பெரியாரின் வரலாற்றையே ஓவியமாக வடிக்க எல்லா ஆற்றலும் பெற்றவர் புகழேந்தி. தமிழர்கள் இவருக்கு ஊக்கம் தந்து இதை நிறைவேற்றிக் கொள்ளுவது அறிவுடைமை” என்று ஓவியக் காட்சி கருத்துப் பதிவேட்டில் எழுதினர். 2005 ஆம் ஆண்டு தமிழீழத்தில் என்னுடைய ‘புயலின் நிறங்கள்’ ஓவியக்காட்சி பயணத்தின் போது, அவரும் குறுகிய நாள் பயணமாக தமிழீழம் வந்திருந்தார் என்பதை இயக்கம் எனக்கு தெரிவித்தது. அப்பயணம் அவருக்கு புதிய புரிதல்களையும் ஏற்படுத்தியிருந்தது... 2015 ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று அம்பத்தூரில் அறக்கட்டளை அலுவலகத்தில் சந்தித்து நீண்ட நேரம் மனம் விட்டு உரையாடினோம்.. அந்த உரையாடல் என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். 96 வயது வரை தமிழர்களுக்காக அதிக அளவிற்கு அவர் உழைத்திருக்கிறார்.. எழுதியிருக்கிறார். செயல்பட்டிருக்கிறார். பலருக்கும் முன் மாதிரியாக திகழ்ந்திருக்கிறார். அவர் சிந்தனையை நிறுத்திக் கொண்டாலும் அவர் எழுத்துகளில் அவர் வாழ்வார் .

ஓவியர் புகழேந்தி. 06.04.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.