இலங்கை அரசால் வடகொரியா போன்று செயற்பட முடியாது!


ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மோதலில் அல்ல என குறிப்பிட்ட மங்கள சமரவீர, இராஜதந்திரம் ஊடாக அனைத்து வகையான தீர்வுகளுக்கும் விடை கிட்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும் மற்றும் படுகுழியை நோக்கி விழும் இந்த தருணத்தில் கூட, வெளிநாட்டு உறவுகளை பேணுவது அவசியம் என்றும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை 30/1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை அமுல்படுத்துவதற்கு கணிசமான நடவடிக்கைகளை எடுக்க கடந்த அரசாங்கம் தவறிவிட்டதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இருப்பினும் நல்லிணக்கத்தை அடைவதற்கும் சுயாதீனமான நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கும் படிப்படியாக பல நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் எடுத்ததாகவும் என்றும் மங்கள சமரவீர கூறினார்.

2019 இறுதி வரவுசெலவுத் திட்டத்தில், காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க இழப்பீட்டு அலுவலகம் அமைக்கப்பட்டது என்றும் அதற்கு தற்போது அரசாங்கத்தில் உள்ளவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்க அமைச்சரவை பத்திரம் ஊடாக நடவடிக்கை எடுத்தபோதும் மைத்ரிபால சிறிசேனவின் பல்வேறு கோரிக்கைகள் காரணமாக அது தாமதமானது என்றும் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.