இலங்கையில் தந்தை மற்றும் மகளின் அரிய கண்டுபிடிப்பு!


பேனாவின் மூலம் இயற்கையைப் பாதுகாக்கும் திட்டமொன்றை இலங்கையைச் சேர்ந்த தந்தையும் மகளும் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள் வீசப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த செய்தியை அவதானித்த கண்டி பகுதியைச் சேர்ந்த சச்சினி கிறிஸ்டினா சுகிர்தன், இதற்கான மாற்றுத் திட்டத்தை சிந்தித்துள்ளார். இது தொடர்பில் தான், தனது தந்தையான சுகிர்தனுடனும் கலந்துரையாடியுள்ளதாக கிறிஸ்டினா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

"இலங்கையில் கொவிட் தொற்றின் முதலாவது அலை ஏற்பட்டிருந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான முடக்க நிலையின் போதே, இந்த திட்டத்தை நான் சிந்திக்கத் தொடங்கினேன். இயற்கைக்கு பாதிப்பு இல்லாத பேனா ஒன்றை தயாரிக்க முடிவெடுத்தேன். அத்துடன் தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, பயன்படுத்தப்பட்ட பின்னர், வெளியில் வீசப்படும் பட்சத்தில், அதில் இருந்து மரங்கள் வளரும் வகையில் இந்த பேனா தயாரிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள பேனாவில், சிறிய வகையிலான செடிகள் மாத்திரமே வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா கூறுகிறார். பேனாவின் அளவு சிறியதாக உள்ளதால், சிறிய விதைகளை மாத்திரமே பேனாவில் உள்ளடக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அதோடு எதிர்வரும் காலங்களில் பெரிய மரக்கன்றுகள் வளரும் வகையில், இந்த பேனாவை தயாரிக்க தானும், தனது தந்தையும் எதிர்பார்த்துள்ளதாக கிறிஸ்டினா நம்பிக்கை தெரிவித்தார்.

தன்னால் தயாரிக்கப்பட்டுள்ள பேனா, 96 சதவீதம் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்லும் என்றும் முதல் கட்டமாக, பேனாவில் மரக்கறி கன்றுகள், பூக்கன்றுகள் மற்றும் ஆயுர்வேத செடிகள் போன்ற விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் குறித்த பேனாவின் பின்புறத்தில் மரக்கறி, பூக்கன்று மற்றும் ஆயர்வேத செடிகளின் விதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், பேனாவின் பின்புறத்தில் இருந்தே, இந்த செடி துளிர்விட ஆரம்பிக்கின்றதாகவும் அவர் கூறினார்.

இந்த பேனாவை, பின்புறமாக, மண்ணில் நட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த பேனா, பயன்பாட்டிற்குப் பின்னர், மண்ணில் நடப்பட்டு ஒன்று முதல் இரண்டு வாரங்களில் கன்று வளரும் என அவர் தெரிவித்தார். குறிப்பாக நடப்படும் பேனாவுக்கு, உரிய வகையில் நீர் சேர்க்கப்படுவதாக இருந்தால், அந்த செடி உரிய வகையில் வளரும் என பேனாவை தயாரித்த கிறிஸ்டினா தெரிவிக்கிறார். இந்த பேனாவில் உள்ளடக்கப்பட்டுள்ள விதைகள் அனைத்தும், உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, பேனாவுக்குள் அடைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, அண்மையில், இந்த பேனாவை தயாரித்த கிரிஷ்டினா, அவரது தந்தை சுகிர்தன் ஆகியோரை அழைத்து, ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது இந்த பேனாவின் உற்பத்தியை விரிவுபடுத்த அரசாங்கம் உதவி செய்யும் என அமைச்சர் உறுதியளித்துள்ளதாக பேனாவை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று, இந்த பேனாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒத்துழைப்பையும் இலங்கை அரசாங்கம் வழங்க முன்வந்துள்ளது. இலங்கையிலுள்ள அரச பாடசாலை மாணவர்களுக்கு இந்த பேனாவின் பயன்பாட்டை அதிகரிப்பதே தமது நோக்கம் என அவர் கூறுகிறார். இதேபோன்று, பேனாவின் உற்பத்தியை அதிகரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தமது மற்றுமொரு நோக்கம் என்று ம் கே.சுகிர்தன் தெரிவித்தார்.

இலங்கையை விடவும், வெளிநாடுகளில் வாழ்வோர் இயற்கையுடன் ஒன்றிணைந்து செல்வதற்கு முக்கியத்தும் வழங்குவதாகவும் அதனால், வெளிநாடுகளில் வாழ்வோருக்கு இந்த பேனாவை மிக இலகுவாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.