வாக்காளர் பட்டியலில் 17 603 பேரின் பெயர்கள் நீக்கம்!!

 


யாழ் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முதல் தடவையாக வாக்காளர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 761 பேரால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படாத காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் மாத்திரம் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.


வாக்காளர் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளமையால், நாடாளுமன்ற ஆசனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் தாக்கம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு பட்டியலில் 4 இலட்சத்து 79ஆயிரத்து 584 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். புதிதாக வெளியிடப்பட்ட பட்டியலில் அந்த எண்ணிக்கை 4 இலட்சத்து 69 ஆயிரத்து 823 ஆகக் குறைந்துள்ளது.


யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்குட்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு 92 ஆயிரத்து 264 பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2020ஆம் ஆண்டு 93 ஆயிரத்து 370 ஆக அது அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதிக்குட்பட்ட உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் முதல் தடவையாக மீளாய்வுக்குட்படுத்தப்பட்டனர்.


இதன்போது 21 ஆயிரத்து 905 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இவர்கள் எங்கிருந்தாலும் தமது பதிவுகளைச் சமர்பிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதனைவிட யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களம் விசேட நடவடிக்கைகள் சிலவற்றையும் முன்னெடுத்திருந்தது. நீக்கப்பட்ட பெயர்களுக்குரியவர்களின் பதிவுகளின் அடிப்படையில் நேரில் சந்தித்து வாக்காளர் பதிவு விண்ணப்படிவத்தை கையளித்திருந்தது. அந்தப் பகுதிக்குரிய பொது அமைப்புக்கள் ஊடாகவும் பெயர்ப்பட்டியலிருந்து நீக்கப்பட்டவர்களில் முடியுமானவர்களை தொடர்புகொண்டு பதிவுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.


கிராம அலுவலர்கள் ஊடாகவும் பதிவுக்கான கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனடிப்படையில் 4 ஆயிரத்து 302 பேரின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் பதிவு செய்யப்படாத 17 ஆயிரத்து 603 பேர் பெயர்ப் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.