தமிழக முதல்வரிடம் வேண்டுகோள்

 


ஆண்டாண்டு காலமாக தாய்த்தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கும், ஈழத்தமிழருக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு மற்றும் கலாசார ரீதியான இறுக்கமான உறவே தமிழ்த்தேசியத்தின் உறுதியான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஈழத்தமிழர் நல்வாழ்விற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தமிழக புதிய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் தமிழக புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வரைந்துள்ள வாழ்த்துக் கடிதத்திலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று இன்று பதவி ஏற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க) அரசிற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் சார்பாகவும், ஈழத்தமிழர் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழகத்தின் முதல்வராக முதன்முறையாக பதவியேற்கும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு விசேடமாக எமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தாங்கள் பதவி ஏற்றதும் தி.மு.க தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஈழத் தமிழர் நல்வாழ்வு எனும் தலைப்பின் கீழ் முன்மொழியப்பட்ட, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவை குறித்துச் சுதந்திரமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் மற்றும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே ஐ.நா. சபையின் மேற்பார்வையில், பொதுவாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் ஆகிய அம்சங்களுடன் ஈழத்தமிழர் தொடர்பான மற்றைய வாக்குறுதிகளிலும் அமைத்திருக்கும் புதிய அரசு விசேட கவனம் செலுத்துமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஆண்டாண்டு காலமாக தாய்த்தமிழக தொப்புள்கொடி உறவுகளுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையில் காணப்படும் பண்பாட்டு மற்றும் கலாசார ரீதியான இறுக்கமான உறவே தமிழ்த்தேசியத்தின் உறுதியான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். ஈழத்தமிழினத்தின் உறுதியும் பலமுமே இந்திய தேசத்தின் தென்கோடிக் கரையினதும் தமிழகத்தினதும் பாதுகாப்பிற்கு இன்றியமையாதது என்பதனை மீண்டும் இவ்விடத்தில் கோடிட்டு காட்டுவதுடன், அந்நிலை மீண்டும் உருவாவதற்கு ஈழத் தமிழினத்தினை பலப்படுத்தவேண்டிய தார்மீக கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு என்பதை உரிமையுடன் வலியுறுத்த விரும்புகின்றோம்.

தங்களின் ஆட்சிக் காலத்தில் தமிழகம் மென்மேலும் வளர்ச்சியுறவும், ஈழத்தமிழினத்தினுடனான உறவு வலுப்பெறவும் எதிர்பார்த்திருக்கின்றோம். தற்போது காணப்படும் கோவிட் 19 பேரிடரிலிருந்து தமிழகம் மிக விரைவில் மீண்டுவர நாமும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.