சட்ட விரோத நடவடிக்கையை கண்காணிக்க கடலில் கமரா!!

 


சமுத்திரப் பாதுகாப்புக்கு உதவும் பல நாள் படகுக் கண்காணிப்புத் தொகுதி ஒன்றை, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவே இதனை அவுஸ்ரேலிய அரசு அன்பளிப்பு செய்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மீன்பிடியைத் தடுத்தல், நாட்டின் எல்லைகள், இந்து சமுத்திர வலயப் பாதுகாப்பு, படகுகள் மூலம் மேற்கொள்ளப்படும் மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைத் தடுத்தல் போன்றவற்றுடன்,
அனர்த்தத்துக்கு உள்ளாகும் படகுகளை இனங்கண்டு மீனவர்களைக் காப்பாற்றுவதற்கு, இந்தக் கண்காணிப்புத் தொகுதி பெரிதும் உதவுமென இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி தெரிவித்தார்.

படகுகளில் பொருத்தப்படும் 4,200 சமிக்ஞை செலுத்தி – வாங்கிகள் (Transponders), கண்காணிப்பு நிலையத்துக்குத் தேவையான அனைத்து வகையான கருவிகள் மற்றும் செட்டலைட் தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய இந்தக் கண்காணிப்புத் தொகுதியின்  பெறுமதி – 5.38 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களாகும்.
இந்தக் கண்காணிப்பு நிலையமானது, கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் கீழ் நிறுவப்பட உள்ளது.
இதன் முதலாவது ட்ரான்ஸ் பொன்டர் தொகுதியினை, நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி அவர்கள் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
2015ஆம் ஆண்டு பொருத்தப்பட்டு, தற்போது செயலிழந்துள்ள இதுபோன்ற 1,250 ட்ரான்ஸ் பொன்டர்கள், பல நாள் படகுகளில் உள்ளன.இந்த இயந்திரங்களை நவீனமயப்படுத்துவதற்கு உதவுமாறு, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்த கோரிக்கை தொடர்பில் உயர்ஸ்தானிகர் கவனம் செலுத்தினார். மக்கள் மைய பொருளாதாரக் கொள்கையைப் பலப்படுத்தி, சர்வதேச தரத்துக்கேற்ப மீன் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு, இந்தக் கண்காணிப்பு முறைமை பெரிதும் உதவுமென, புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைத் தலைவர் சரத் தாஸ் தெரிவித்தார்.

முக்கியத்துவம் வாய்ந்த பூகோள அமைவிடத்தைக் கொண்டுள்ள இலங்கையின் சமுத்திரப் பாதுகாப்புக்கு – இந்தக் கண்காணிப்பு முறைமையின் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும், அமைச்சுகளின் செயலாளர், பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்கள். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகள், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.