இங்கிதம் தேடும் மனதோடு எதிர்பார்ப்பு!

 


நான் ஒரு அடிமைத்தேசத்து 

முடிசூடா இளவரசி

என் எழுத்துக்கள் ஒரு பிரசவகாலத்தை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறது 


அதிகாலைப் பொழுதில்

பனித்தூவலில் நனைந்தபடி

சுதந்திரக் கவியெழுதி

மூங்கில் காட்டோரமாக தூதனுப்புகிறேன் 


உழுத்துப்போன பட்டமரம் ஒன்று

உயிர்ப்பிற்காக கதறியபடி இருக்கிறது 


ஒரு துப்பறிவாளன்போல் மௌனமாக

நடந்தாலும்

பனித்துளி ஈரம்பட்ட தாய்த்தேசத்தின்

மண்வாசம் 

சிறு குழந்தையைப்போல குதூகலிக்க வைக்கிறது 


உயிரை உருக்கும் இசை ஒன்றை கேட்டபடி

என் கனவுகளை நிரப்பி வைத்திருக்கும்   பிச்சைப் பாத்திரத்தை பத்திரப்படுத்துகிறேன் 


தாயின் கதகதப்பில் வாழும் பறவைக் குஞ்சைப்போல 

பிய்த்தெடுக்க முடியாது பிடித்துப்போகிறது தாய்மொழி 


வற்றிய நதி குளிர்ச்சிக்காக ஏங்குவதுபோல்

துளையற்ற மூங்கிலில் ஓசையை

தேடியபடி 


இங்கிதம் தேடும் மனதோடு 

அடிமைத்தனத்தில் இருந்து  

விடுபட நகர்ந்துகொண்டிருக்கிறேன். 


-பிரபாஅன்பு-

14.08.2021

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.