இலங்கை பெண்ணை ஏமாற்றிய பெண் உட்பட நான்கு மீனவர்கள் கைது

 


தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கை யுவதியை சட்டவிரோதமாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய பெண் உட்பட 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (07) ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் இருந்து நேற்று (06) அதிகாலை நாட்டுப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள் முதலாவது மணல் திட்டில் ஒரு பெண் தனியாக நிற்பதை பார்த்து மெரைன் பொசாருக்கு தகவல் வழங்கினர்.

தகவலின் அடிப்படையில் மணல் திட்டில் ரோந்து படகில் சென்ற மெரைன் பொலிசார் பெண்ணை மீட்டு ராமேஸ்வரம் மெரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை செய்ததில் அந்த பெண் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியை சேர்ந்த கஸ்தூரி என தெரியவந்தது.

இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மூலம் விமானத்தில் சென்னைக்கு வந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.

இலங்கை முள்ளிவாய்க்காலில் உள்ள அவரது தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிவு செய்த அந்த பெண் ராமேஸ்வரத்தில் இருந்து சட்ட விரோதமாக படகில் செல்ல முடிவு செய்து கடந்த 4 ஆம் திகதி சென்னையில் இருந்து பேருந்து மூலம் புறப்பட்டு சனிக்கிழமை காலை ராமேஸ்வரத்தை வந்தடைந்துள்ளார்.

பின் ராமேஸ்வரத்தில் தனியார் தங்கும் விடுதியில் தங்கிய அந்த பெண் தனுஷ்கோடியை சேர்ந்த முனீஸ்வரனிடம் இலங்கைக்கு செல்ல படகு கட்டணமாக ரூபாய் 30 ஆயிரம் கொடுத்துள்ளார்.

முனீஸ்வரன் சனிக்கிழமை மாலை பாம்பன் சின்ன பாலம் கடற்கரை வர சொல்லியதால் அங்கு சென்ற அந்த பெண் கடலில் தயாராக இருந்த ஒரு படகில் புறப்பட்டு இலங்கை சென்றுள்ளார்.

கஸ்தூரியை ஏற்றிச்சென்ற படகோட்டிகள் நீண்ட நேரம் கடலில் சுற்றி விட்டு நள்ளிரவு 12 மணியளவில் இலங்கை வந்து விட்டதாக தெரிவித்து தனுஷ்கோடி கடல் பகுதியில் அமைந்துள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

இலங்கைப் பெண் கஸ்தூரியை கைது செய்த மெரைன் பொலிசார் இலங்கைக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்வதாக கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மீனவர் முனீஸ்வரன், படகில் ஏற்றி சென்ற முனிராஜ், சிபிராஜ் மற்றும் சின்ன பாலத்தை சேர்ந்த மீனவ பெண் மற்றும் இலங்கை பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்த மெரைன் பொலிசார் இன்று காலை ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணைக்கு பின்னர் இலங்கை பெண் உட்பட 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

- நிருபர் லெம்பட்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.