சுமந்திரனின் கனவிற்கு ஆப்பு வைத்த செல்வம் எம்.பி!!


 சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று வியாழக்கிழமை(14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் இன்று போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது.குறிப்பாக விவசாயிகளின் நிலைமை மோசமான சூழலில் காணப்படுகின்றது. நாட்டிற்கே உணவை வழங்குகின்ற விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சாமானிய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாயம் செய்வது ஒரு பக்கம். குத்தகை என்ற அடிப்படையில் நிலத்தை பெற்று விவசாயம் செய்கின்ற நிலையும் காணப்படுகிறது.

மேலும் தமது தங்க நகைகளை அடகு வைத்தும், வங்கிக் கடன்களை பெற்று விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். தற்போது விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படாமையால் மிக மோசமான ஒரு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் விவசாயிகள் தமது உணவுக்கான பிரச்சினையையும் எதிர் நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.திட்டமிடப்படாத செயற்பாடு என கூறியமைக்கு காரணம் விவசாயிகளை இயற்கையான பசளைக்கு மாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

உடனடியாக செயற்கை உரத்தை நிறுத்தி இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று கூறினால் விவசாயிகளால் என்ன செய்ய முடியும்? வேடிக்கையாக உள்ளது. -எனவே விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை வழங்கிக்கொண்டு இயற்கையான உரத்திற்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் படு மோசமான நிலமையை ஏற்படுத்தி,இன்று வெளியில் இருந்து பசளையை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றனர். -விவசாயிகள் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலமாக உள்ளது.ஆனால் உரம் இல்லை, மருந்து இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாய நடவடிக்கைகளுக்காக அடகு வைக்கிற தங்க நகைகளை மீட்கவும்,பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தவும் விவசாயிகள் திண்டாடுகின்றனர். -இதனால் இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.எங்களுடைய விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்.என தெரிவித்தார். மேலும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், -இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள் . அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் தான் தேர்தல் இடம்பெறும் என கூறுகிறார்கள்.

அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள். 13 ஆவது திருத்தச் சட்டம் என்று டெல்லியில் சென்று பிரதமர் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தன் அதிகாரங்களை பிளஸ் என்று சொல்லி வெளியில் வந்த பின் 13 ஐ கொடுக்க முடியாது என்று சொல்லி பேசுகின்ற சந்தர்ப்பங்கள் போல் உள்ளது. எனவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.

அதே நேரத்தில் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை. அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சனைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேளித்தனமான விடையமாக நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். என தெரிவித்தார்.

இந்திய மீனவர்களின் அத்து மீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம்.பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க திட்டத்தை வகுத்து செயல்படுவதே சாலச் சிறந்தது. என அவர் தெரிவித்தார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும். -தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை யை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும். சம்பந்தன் அவர்களின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.    

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.