IOC எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

 


லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் செயற்பாடு இந்திய ஓயில் நிறுவனத்தினால் (IOC) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எல்.ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் உலக சந்தையில் அதிகளவான எரிபொருள் விலை இன்று (15) பதிவானது.

ப்ரென்ட் (Brent) ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினத்தைவிட மூன்று சதவீதத்தினால் அதிகரித்து 85.10 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.

திடீரென எரிபொருள் விநியோகம் செயற்பாட்டை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நிறுத்தியமையினால் தமது சங்கத்தினரும், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான பத்திரண தெரிவித்துள்ளார்.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாக அண்மையில் அறிவித்திருந்தது.

இதற்கமைய ஒரு லீற்றர் டீசல் 25 ரூபாவினாலும், ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாவினாலும் அதிகரிக்க எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பின்னணியில் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், எல்.ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.