பாகிஸ்தானை வீழ்த்தியது அவுஸ்ரேலியா!!


ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, பத்து ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டுபாயில் நேற்று (வியாழக்கிழமை) பெரும் எதிர்பார்ப்;புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மொஹமட் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இணைந்து 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில், 39 ஓட்டங்களுடன் பாபர் அசாம் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பகர் சமான், மொஹமட் ரிஸ்வானுடன் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.

17.2ஆவது ஓவரில் 67 ஓட்டங்களுடன் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து களமிறங்கிய அசிப் அலி தான் எதிர்கொண்ட முதல்பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய சொயிப் மாலிக், ஒரு ஓட்டத்துடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

20 ஓவர்கள் நிறைவில், பகர் சமான் 55 ஓட்டங்களுடனும் ஹபீஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருக்க பாகிஸ்தான் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும் பெட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

முதல் ஓவரின் மூன்றாவது பந்தில், அணித்தலைவர் ஆரோன் பின்ஞ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய மிட்செல் மார்ஷ், மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டேவிட் வோர்னருடன் இணைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடினார்.

மிட்செல் மார்ஷ்சும் 6.2ஆவது ஓவரில் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 5 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய க்ளென் மேக்ஸ்வெல், அணிக்கு நம்பிக்கை அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 7 ஓட்டங்களுடன் ஒய்வறை திரும்பினார்.

இதனையடுத்து களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டொயினிஸ், களத்தில் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த வோர்னர் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குறிப்பாக டேவிட் வோர்னர் விக்கெட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழப்பு ஏற்பட்டதாக நடுவர் அறிவித்தாலும் பந்து துடுப்பாட்ட மட்டையில் படவில்லை என்பது பின்னர் மூன்றாவது நடுவரின் கமராவில் பதிவாகியிருந்தது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால், வோர்னர் ஆட்டமிழக்கும் போது, மறுபரீசிலணைக்காக மூன்றாவது நடுவரிடம் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, 10.1 ஓவரின் போது 89 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறிய அவுஸ்ரேலியா அணியின் வெற்றி கனவு கலைந்ததாகவே பார்க்கப்பட்டது.

ஆனால், வோர்னரின் ஆட்டமிழப்புக்கு பிறகு களம் புகுந்த மத்தியு வேட், போட்டியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வார் என யாரும் எதிர்பார்திருக்கவில்லை.

ஒவருக்கு 12 ஓட்டங்கள் என்ற வீதத்தில் அவுஸ்ரேலியா துடுப்பெடுத்தாட வேண்டியிருந்தது. ஆனால் விக்கெட்டுகளை அடுத்தடுத்து அவுஸ்ரேலியா அணி இழந்திருந்த போதும் அணியின் ஓட்ட வீதம் 7ஆக இருந்தது.

மறுமுனையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக பந்து வீசி குறைவான ஓட்டங்களையே கொடுத்து வந்தது. ஆனால், மார்க்கஸ் ஸ்டொயினிஸ் மற்றும் மத்தியு வேட் ஆகியோர் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

19 ஓவர், நடப்பு தொடரில் மட்டுமல்லாமல் அதுவரை இப்போட்டியிலும் சிறப்பாக பந்து வீசிய சயின் ஷா அப்ரிடிக்கு கொடுக்கப்பட்டது.

முதல் பந்தில் மத்தியு வேடின் பிடியெடுப்பை ஹசன் அலி தவறவிட, வெற்றி அவுஸ்ரேலியா பக்கம் சாய்ந்தது.

முதல் பந்தில் இரண்டு ஓட்டங்கள், அடுத்தடுத்து தொடர்ச்சியாக மூன்று சிக்ஸர்கள் விளாசிய மத்தியு வேட், 19 ஓவரிலேயே அணிக்கு வெற்றியை பரிசளித்தார்.

இதன்படி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்த அவுஸ்ரேலிய அணி, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 17 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 41 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்ட மத்தியு வேட் தெரிவுசெய்யப்பட்டார்.

முன்னதாக 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவுஸ்ரேலியா அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்து.

பல கோடி இரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.