இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார் சீன வெளிவிவகார அமைச்சர்!


இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ சனிக்கிழமை (08-01-2022) கொழும்பு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகளுக்கான விஜயத்தையடுத்து மாலைத்தீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் சீன வெளிவிவகார அமைச்சர் கொழும்பில் முக்கிய பல சந்திப்புகளில் ஈடுப்படவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (basil Rajapaksa) உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புகளின் போது துறைமுக நகர் திட்டம் குறித்து விசேடமாக கவனம் செலுத்துவார் என்பதுடன், கடன் தவனை சலுகை அல்லது மேலதிக கடன் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் இலங்கை சர்வதேச கடன் சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீடம் கடன் நிவாரணத்திற்கான இணக்கப்பாட்டை நோக்கிய கலந்துரையாடல்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஈடுப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக இலங்கைக்கு வெளிநாட்டுக் கடன் வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது. அந்த கடன் தொகையானது மொத்தக் கடனில் 10 வீதத்திற்கும் அதிகமானதாகவே காணப்படுகின்றது.

பெரும்பாலான கடன்கள் வர்த்தக அடிப்படையில் சர்வதேச சந்தையில் இருந்து பெறப்பட்டவையாகும். இதுவே நெருக்கடி தீவிரமடையவும் காரணம். அந்நிய செலாவணி கால நிதியளிப்பு வசதி ஊடாக 2018 ஆம் ஆண்டில் சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை பெற்றுள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றுள்ளது.

அதே போன்று ஏற்பட கூடிய பொருட்களின் தட்டுப்பாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்துவதற்காக சீன மக்கள் வங்கியிடமிருந்த 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீன நாணயத்தை வழங்க பெய்ஜிங் விருப்பம் தெரிவித்திருந்தது.

இவ்வாறானதொரு நிலையில் தரம் குறித்த பிரச்சினையை அடிப்படையாக கொண்டு 20 ஆயிரம் மெட்ரிக் டொன் சீன உரத்தை அண்மையில் இலங்கை நிராகரித்தது. இதனால் இலங்கை – சீன உறவில் விரிசல் ஏற்பட்டது.

ஆனால் பாரம்பரியமான இருதரப்பு நட்புறவு பாதிப்படைந்து விட கூடாது என்ற உறுதிப்பாட்டில் இரு தரப்பினரும் தற்போது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். எனவே தான் சீன வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு முன்னதாக உரப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சீன நிறுவனம் புதிய உரத்தை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்துமாறு நீதிமன்றம் மக்கள் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க இலங்கைக்கு உதவ சீன வெளிவிவகார அமைச்சர் மேலதிக நிதியை வழங்குவரா அல்லது கடன் தவனைகளுக்கு நிவாரணம் அளிப்பாரா என்பது குறித்து உறுதிப்பட குறிப்பிட இயலாது.

ஆனால் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு சாதகமாக பதிலளிக்கக்கூடும் என்பதே கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகளின் கணிப்பாடுகின்றது.

மறுப்புறம் சீனாவின் மிக முக்கிய முதலீடுகளில் ஒன்றான துறைமுக நகரின் புதிய முதலீடுகள் ஊடாக இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்த வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் சில முன்னணி சீன நிதி நிறுவனங்கள் துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளதாக பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதுவர் பாலித கொஹோன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.