இலங்கையில் கொல்லப்பட்டவர்களில் 06 ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன!

 


கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் இலங்கையில் கொல்லப்பட்டவர்களில் 06 ஊடகவியலாளர்களின் படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன


இதில்,

01. மயில்வாகன் நிமலராஜன் - யாழ்ப்பாண நகரமத்தியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஊரடங்கு வேளையில் அவரது வீட்டில் வைத்து துணைப்படையாக இயங்கிய EPDPயினரால் 19.10.2000ம் அன்று இரவு 10மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரை சுட்டுவிட்டு தாக்குதலாளிகள் அவரின் வீட்டிற்குள் கைக்குண்டொன்றையும் வீசியதால் அவரின் தாய், தந்தை மற்றும் சிறுவனொருவரும் படுகாயமடைந்தனர்


02. பிரகீத் எக்னலிகொட - இவர் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியருமாவார். ஜனாதிபதித் தேர்தலுக்கு இரண்டு நாளைக்கு முன்னர் 24.01.2010அன்று இரவு 8.30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்து காணாமலாக்கப்பட்டார். இச்சம்பவத்திற்கு முன்னரும் 2009இல் கடத்தப்பட்ட இவர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்


03. மாமனிதர் தராக்கி சிவராம் - 28.04.2005ம் திகதி இரவு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வாகனமொன்றில் வந்த சிலரால் கடத்தப்பட்ட நிலையில், மறுநாள் அவரது சடலம் பாராளுமன்றத்திற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. சிவராம் அவர்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது துணைஇராணுவக்குழுவாக இயங்கிய சித்தார்த்தனின் பிரத்தியேக வாகனமே ஆகும். இக்கடத்தல் சம்பவம் தொடர்பாக சிலநாட்களின் பின்னர் புளொட் பீற்றர் எனப்படும் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடமிருந்து சிவராம் அவர்கள் பயன்படுத்திய கைத்தொலைபேசி மற்றும் சிம் என்பன மீட்கப்பட்டிருந்தது. அதன் பின்னொருநாளில் வழக்கு ஆவணங்கள் மற்றும் சாட்சிப் பொருட்கள் அனைத்தும் நீதிமன்ற களஞ்சியத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டு சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் இல்லையெனத் தெரிவித்து புளொட் பீற்றர் விடுதலை செய்யப்பட்டார்


04. கீத் நொயர் - 22.05.2008அன்று ஊடகவியலாளரான கீத் நொயர் வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டு மோசமான சித்திரவதை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்


05. லசந்த விக்கிரமதுங்க - 08.01.2009அன்று தனது வாகனத்தில் பத்திரிகை அலுவலகம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது வீதியில் வைத்து ஆயுததாரிகளால் சுடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இவரது கொலை தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அப் புலனாய்வுத்துறை உறுப்பினர் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்


06. பொட்டல ஜயந்த - யூன் 2009இல் வாகனமொன்றில் வந்தவர்களால் ஊடகவியலாளரான பொட்டல ஜயந்த கடத்தப்பட்டு மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். இனிமேல் எழுதக்கூடாது என அச்சுறுத்தி அவரின் விரல்கள் உடைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இச்சம்பவங்களைத் தவிர பல தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் சிறிலங்கா அரசபயங்கரவாதத்தால் கொல்லப்பட்டிருந்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.