உயிர்த்துடிப்பு - பிரபாஅன்பு!!

 


என் மூன்று முத்துக்களே

உயிர் குடிக்கும் எறிகணைக்கு உங்களை

நான் பறிகொடுத்து

இன்றோடு 13 வருடங்கள் ஆனதுவே


பெற்ற மனமும் உங்களை சுமந்த வயிறும் தீயாய் பற்றி எரிகிறதே

அம்மா என்றெனை அழைத்து 

ஒரு முறை எனக்கு

முத்தமிடமாட்டீர்களா.?


என் கண்மணிகளே

நானருகில் இல்லாதுவிட்டால் தூங்கமாட்டீர்களே 

அம்மாவை தனியே தூக்கமிழந்து

தவிக்கவிட்டு 

நிரந்தரமாக துயில்கொள்ளச் சென்றீரோ


பெற்றெடுத்த பிள்ளைகளை இழந்து

படுகாயம் அடைந்து நரக வேதனையோடு

வாழ்கிறேன்

இந்த மண்ணில் தமிழச்சியாய் பிறந்ததுதான் என் குற்றமா.?


பாவி நான் 

உங்களை இழந்தேனே

இல்லை இல்லை என்னையே  நானிழந்தேன்

அதனால் சுயநினைவின்றி வாழ்கிறேன்


கனவிலும் நினைவிலும்

அம்மா என்று நீங்கள் என்னை  

அழைக்கும்

சத்தம் எனக்குக் கேட்கிறதே


ஐயோ! 

நான் என்ன செய்வேன்

பட்டமரமாய் கண்ணீரோடு தவிக்கிறேனே


உங்களை பறிகொடுத்ததால்

எனக்கு நிம்மதி இல்லையே

எப்போது இந்த அம்மாவை உங்களிடம்

அழைத்துக் கொள்வீர்கள்


நான் பெற்றெடுத்த செல்வங்களே

கொலை வெறிகாறர்கள்

வயிற்றுக்குள் வைத்தே 

உங்களை கருவறுத்து விடுவார்கள்


இம் மண்ணிலே

மீண்டும் பிறப்பெடுத்து விடாதீர்கள்......
பிரபாஅன்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.