இலங்கை மத்திய வங்கியின் கடுமையான எச்சரிக்கை!


இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் அதன் சுமையை பொருளாதாரக் கட்டமைப்பு சார்ந்த அனைத்துத்தரப்பினரும் சமளவில் தாங்கிக்கொள்ளவேண்டும்.

அதன்படி நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி நாமனைவரும் முன்நோக்கிப் பயணிப்பதை இலக்காகக்கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயப்பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டல்கள், ஏற்றுமதி மட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதுடன் அவை உரியவாறு பின்பற்றப்படுகின்றதாவென உறுதிப்படுத்தப்படும்.

அதனைமீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக உரிய சட்டத்தின் பிரகாரம் மிகவும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்திருக்கின்றது.

இதுகுறித்து மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கத்தைக் குறைப்பதற்கு அரசாங்கமும் மத்திய வங்கியும் ஒன்றிணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.

தற்போதைய நெருக்கடிக்கும், அது மேலும் தீவிரமடைவதற்கும் நாட்டின் வங்கிக்கட்டமைப்பில் திரவத்தன்மை கூடிய வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு மிகவும் குறைவான மட்டத்தில் காணப்படுகின்றமையே முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றதுவெளிநாட்டுக் கையிருப்பு வீழ்ச்சியானது எரிபொருள் உள்ளடங்கலாக அத்தியாவசியப்பொருட்களின் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டின் வங்கிக்கட்டமைப்பிடம் போதியளவிலான வெளிநாட்டுக்கையிருப்பு காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு மத்திய வங்கியானது ஏற்றுமதிகள் மூலமான வருமானத்திற்கு சில மட்டுப்பாடுகளை விதிக்கவேண்டிய நிலையிருக்கின்றது.

குறிப்பாக ஏற்கனவே மத்திய வங்கியினால் ஏற்றுமதிகள், அதற்கான கொடுப்பனவுச்செலுத்துகைக் காலம் என்பன தொடர்பில் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் மூலம் வெளிநாட்டு நாணய வெளிப்பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் முறைசாரா வழிமுறைகளைவிடுத்து, உரிமம்பெற்ற வங்கிகளின் ஊடாக வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.


இருப்பினும் இந்த வழிகாட்டல் மற்றும் மட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் வெற்றி என்பது வர்த்தக சமூகம் மற்றும் வங்கிக்கட்டமைப்பு ஆகியவற்றின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றிலேயே தங்கியிருக்கின்றது.

எதுஎவ்வாறெனினும் சந்தையின் சில தரப்பினர் இந்த வழிகாட்டல்களுக்கு அமைவாகச் செயற்படவில்லை என்ற விடயம் மத்திய வங்கியின் கவனத்திற்குக்கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

மிகவும் கடினமானதொரு காலப்பகுதியில் அனைத்துத்தரப்பினரும் சமளவில் சுமையைத் தாங்கிக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்படி நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தி நாமனைவரும் முன்நோக்கிப் பயணிப்பதற்கு வெளிநாட்டு நாணயப்பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டல்கள், ஏற்றுமதி மட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதுடன் அவை உரியவாறு பின்பற்றப்படுகின்றதாவென உறுதிப்படுத்தப்படும் என்பதை பொருளாதாரத்துடன் தொடர்புடைய அனைத்துத்தரப்பினருக்கும் மீளவலியுறுத்துவதற்கு மத்திய வங்கி விரும்புகின்றது.

அதனைமீறி செயற்படும் தரப்பினருக்கு எதிராக உரிய சட்டத்தின் பிரகாரம் மிகவும் வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேவேளை பொருளாதார உதவித்திட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் ஓரளவிற்கு முன்னேற்றத்தைக் காண்பிப்பதுடன் தகுதிவாய்ந்த சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களின் உதவியுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.