மரணித்துவிட்ட மனிதநேயம் - கோபிகை!!

 


அன்பு, கருணை, இரக்கம் இவை எல்லாம் மனிதநேயத்தின் பண்புகளாக கொள்ளப்படுகின்றன. ஒரு மனிதன் எவ்வளவு அறிவாளியாக, ஆற்றல் மிக்கவனாக, வீரனாக, விவேகியாக இருந்தாலும் அவனுடைய உள்ளத்தில் மனிதநேயம் இல்லை என்றால் அவன் வாழ்வதிலோ மனிதனாகப் பிறந்ததிலோ அர்த்தமே கிடையாது.

இன்றைய காலத்தில் மனிதநேயம் என்பது அற்றுப்போகும் அபாயம் அதிகளவில் காணப்படுகின்றது. பெருகிவிட்ட முதியோர் இல்லங்களும் சிறுத்துவிட்ட மன விசாலங்களும் அதனையே சொல்கின்றன.

மிருகங்களை மிருகத்தனமாக கொல்லும் அராஜக மனநிலை அதிகரித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் புலி ஒன்றைக் கொடூரமாகக் கொன்ற சம்பவம் நாம் எல்லாம் மறந்துவிட முடியாத ஒன்று. இல்லங்களில் அறம் தவறிவிட்ட இன்றைய காலம் இவ்வாறுதான் செய்யத் தூண்டுகிறது. எளியோரை மதித்தல், கண்ணியம் காத்தல், அன்பை அளித்தல், இல்லாமையில் கொடுத்தல் , இயலாமையில் உதவுதல் போன்ற அற உணர்வுகள் மனிதநேயத்தைக் கட்டிக்காப்பவை. அவை முன்னர் ஒவ்வொரு வீடுகளிலும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இன்று அது அருகிவிட்டது.நேசம் பெருக்கெடுக்க மற்றவர் துன்பம் பொறுக்க முடியாத உன்னதமான மனிதர்கள் இந்தப் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள். உயர்ந்த ஒழுக்கம், மகத்தான பண்பாடு, துயரத்தில் தோள் கொடுக்கும் அன்பு இவை எல்லாம் நிறைந்திருந்தது எங்களிடம்.

சங்க காலத்தின் வள்ளல்கள் மனித நேயத்தின் சிகரங்களாகப் புகழப்பட்டார்கள். குளிரால் நடுங்கிய காட்டு மயிலுக்கு இரக்கமுற்று தனது போர்வையைக் கொடுத்தான் பேகன். வாடிய முல்லைக்கொடி படர தனது தேரினை ஈந்தான் பாரி. வலிமைமிக்க குதிரைகளை இரவலர்களுக்கு கொடையாக வழங்கினான் காரி. ஒளி மிக்க நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் இரவலர்களுக்கு கொடுத்தான் ஆய். நீண்ட நாட்கள் உயிர் வாழ வைக்கும் அமிர்தமான நெல்லிக்கனியை தான் உண்ணாமல் தனது புலவர் நீண்ட நாள் வாழ்ந்தால் தமிழ் சிறப்புறும் என சிந்தித்து, அதை அவ்வையாருக்கு கொடுத்தான் அதியமான். பசியோடு வாடி வந்த இரவலர்களுக்கு வேண்டிய பொருள் வழங்கி, மன நிறைவு கண்டு மகிழ்ந்தான் நள்ளி. கூத்தாடுபவர்களுக்கு வளமான நாடுகளை வழங்கி மகிழ்ந்தான் ஓரி. புறாவுக்காக தன் தசையைக் கொடுத்தான் சிபி. பசுவுக்காக தன் மகனைக்கொன்ற மனுநீதி, இந்திரர் அமிர்தம் கிடைத்தாலும் அது இனிமையானது என தனித்து உண்ணாத தகைமையாளர்களாலும், தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர் களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.போதை ஊசியால் மூன்றாவது மரணம் சம்பவித்திருக்கிறது யாழ்ப்பாணம் என்று புகழப்படும் கலாசார பூமியில். மனித நேயம் செத்துப்போன மனிதர்களால்தான் அதன் வியாபாரம் செழித்துக்கிடக்கிறது. நாளைய தூண்கள் இன்று , செல்லரித்து இடித்து வீழ்த்தப்படுகின்றார்கள். தமிழ் தலைமைகளின் மனிதநேயம் மரணித்துப் போயிருக்கிறது.

முதியவர்கள் வலிதாங்கி நின்றுகொண்டிருக்க, இளையவர்கள் அரட்டை அடித்தபடி, ஆசனங்களில் அமர்ந்திருந்து பயணிக்கும் அருவருப்பான ஒரு கலாசார மாற்றம் இன்று பிள்ளைகளிடம்.

அண்மையில் பார்க்க நேர்ந்த ஒரு செய்தி மனிதநேயத்தை கொன்று புதைத்திருந்தது. வெளிநாட்டில் இருந்து வந்த மணமகன், உள்ளுர் மணமகளுடன் திருமணம். திருமணத்திற்கு முந்தியநாள் இரவில் அவளது காதலன் , அவளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை திருமண வீட்டின் வாயிலில் காட்சிப்படுத்திவிட்டுச் சென்றுவிட்டான்.

குடும்பங்களுக்குள் சலசலப்பு. மணமகனின் பெற்றோர் திருமணம் வேண்டாம் என்கின்றனர், மணமகனோ ” பரவாயில்லை, திருமணம் செய்து கொள்கிறேன் ” என்கிறார் பெற்றவர்களின் எதிர்ப்பை மீறி.

திருமணம் முடிந்துவிட்டது, அவளோடு ஒரு மாதம் வாழ்ந்துவிட்டு வெளிநாடு சென்ற மணமகன் , விவாகரத்திற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

தவறுக்கு தவறு தண்டனையா? மன்னிப்பு என்ற மனிதநேயம் செத்துவிட்டதா? இந்தப் பெண்ணின் செயலை நியாயம் என்ற சொல்லவில்லை, திருமணத்தை நிறுத்தியிருந்தால் ஒரு வகை நியாயம்….ஒரு மாதம் வாழ்ந்துவிட்டு விவாகரத்து கோருவது, எந்த வகையான மன வக்கிரம்? மடிந்து போன இந்த மனித நேயத்தை எப்படி உயிர்ப்பிக்கப்போகிறோம்? அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு விடயமாகும்….

கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.