ஆகாயத்தாமரை தொடர்பான எச்சரிக்கை!!

 


வாஸ்துவின் பெயரால் இப்போது  வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ள  ஆகாயத் தாமரை   சூழல் பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பில், அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில்,

அதிர்ஷ்ட மூங்கிலை தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத் தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது. அந்நிய நீர்க்களையான ஆகாயத் தாமரையை அதிர்ஷ்டம் தரும் தாவரமாக பலரும் ஆர்வமுடன் வீடுகளில் நீர்த்தொட்டிகளில் வளர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

பூச்செடிகள் விற்பனையாளர்களும் பின்விளைவுகளை அறியாமல் இதனை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்கள். இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை எந்த உயிரியையுமே தேவையற்றுப் படைப்பதில்லை. ஒவ்வோர் உயிரியும் முக்கியத்துவம் மிக்கவை. அவை பரிணமிக்கும் சூழலின் சமநிலையில் இன்றியமையாத பங்களிப்பை நல்கி வருகின்றன

ஆனால், அவை இயற்கையாக தோன்றிய பிரதேசத்தில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்படும்போது அவற்றுள் சில இனங்கள் ஆக்கிரமிப்பு இனங்கள் ஆகிவிடுகின்றன

புதிய சூழலின் சமநிலையைக் குழப்பிச் சரி செய்ய முடியாத அளவுக்குப் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உலகின் உயிர்ப் பல்வகைமையை அழித்துவரும் பிரதான காரணிகளில் ஒன்றாக இந்த அந்நிய ஊடுருவல் இனங்கள் உள்ளன.

அத்தகைய ஒரு அந்நிய ஆக்கிரமிப்புத் தாவரமே ஆகாயத்தாமரை ஆகும். ஆகாயத் தாமரை தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட ஒரு அசுர நீர்க்களை. நீரே தெரியாத அளவுக்கு விரைந்து மூடி வளரும் ஆற்றல் பெற்றவை.

இதனால், நீர்ச்சூழற் தொகுதியில் ஏனைய உயிரினங்களின் வளர்ச்சியை பாதிப்பதோடு, நுளம்புகளின் பெருக்கத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. குளங்களில் இருந்து தப்பிச் செல்லும் இந்த களை வயல் நிலங்களில் பல்கிப்பெருகி நெல் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இதனால், இலங்கை அரசாங்கம் ஆகாயத் தாமரையை அந்நிய ஊடுருவல் ஆக்கிரமிப்பு இனமாகக் கருதி அழிக்கத் தலைப்பட்டுள்ளது. அதேவேளை யாழ்ப்பாணம் ஆரியகுளத்திலிருந்து இதனை முற்றாக அகற்றுவதற்கு மிகப் பெருந்தொகைப் பணமும் பெருங்காலமும் எடுத்தது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இன்னும் ஏராளமான குளங்கள் ஆகாயத் தாமரையின் ஆக்கிரமிப்புக்குள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் , அதிர்ஷ்ட தேவதை என்ற அந்தஸ்தை வழங்குவது அதற்கு அசுரப் பலத்தை பெற்றுக்கொடுத்துவிடும் எனவும் அவர் எச்சரிக்கின்றார்.

வீடுகளிலிருந்து தவறுதலாக வெளியேறும் இதன் சிறு அரும்பே , அதன் பல்கிப்பெருகும் ஆற்றலால் சூழலை அதன் ஆக்கிரமிப்பின் கீழ் விரைந்து கொண்டுவந்துவிடும்.

ஏற்கனவே பார்த்தீனியம், சீமைக்கருவேலம், இப்பில் போன்ற அந்நியன்களால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் எம் நிலம் ஆகாயத் தாமரையினாலும் வலிகளைச் சுமக்க நேரிடும்.

எமது விவசாயத் திணைக்களம் ஆகாயத் தாமரை தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தின் சகல மட்டங்களிலும் ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றும் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.