எதை மறப்பேன்? எப்படி மறப்பேன்?

கனதியாக கனக்கும் உண்மைகளை
கனவாக நினைத்து
கடந்து செல் என்கிறார்கள்.
எப்படி முடியும்?

எதை கனவாக கருதுவது?
பதுங்குகுழியில் புதைத்தவரையா?
எறிகணையில் சிதைந்தவரையா?
கிபீர் அடியில் கருகியோரையா?
எப்படி மறப்பேன்.?
எதை மறப்பேன்?

தாயிறந்ததை உணராத குழந்தை
உதிரத்தை சுவைத்ததை மறக்கவா?
பட்டினியால் குடல் சுருங்கி
கௌரவத்தால் செத்தவரை மறக்கவா?
உணவுக்காக பகலிரவாய்
தெரு நாய்களாய் அலைந்ததை மறக்கவா?
உற்றார் உறவினர் முகம் பார்க்க ஏங்கி
இறுதி மூச்சை விட்ட பெயர் தெரியா
உறவுகளை மறப்பதா?
எதை மறப்பேன்?
எப்படி  மறப்பேன்?

உணவு தேடிச் சென்றவர்
திரும்பாத கதை மறக்கவா?
சுடும் வெயிலோடும் மழை நுளம்போடும்
கொத்துக் குண்டடித்து
குற்றுயிரும் குலையுயிருமாய்
பக்கத்தில் பார்த்திருக்க
அணு அணுவாய் செத்தவரை மறக்கவா?
தலை பிறிதாய் பந்தாக
பறந்த நிஜம் மறக்கவா?
பகலிரவாய் பதைபதைத்து
கடந்த துயர் மறக்கவா?
புதைக்கா உடலை சுவைத்த நாய்கள்
கலைத்த துயரை மறக்கவா?
எதை மறப்பேன்?
எப்படி மறப்பேன்.?

நிமிடத்தில் சிரித்துக் கடந்தவர்கள்
சிதைந்து சிதறிய அவலம் மறக்கவா?
காலிழந்து கையிழந்தும்
வாழப் போகிறேன் காப்பாற்றுங்கள் என
 வாய்விட்டழுதோரை
காப்பாற்ற முடியாது கடந்த துயர் மறக்கவா?
குடல் பிரிந்து குருதி குளித்து
குடல் பிரட்டும் மனித தசை மணத்தில்
எஞ்சியிருந்த உயிரைப் பிடித்து
நெடிதுயிர்த்து விம்மி விம்மி
கெஞ்சி அழுத கண்களை மறப்பதா?
வாழ முடியாத வாழ்வொன்றை
நொந்து நொந்து கடந்த வடுவை மறக்கவா?
எதை மறப்பேன்?
எப்படி மறப்பேன்?

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா
Latha kanthaija


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.