வடக்கில் யுத்தகாலத்தில் பாதுகாப்பு நிமித்தமாக தமிழர்களின் இடங்கள் கைப்பற்றப்பட்டன!

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, “வடக்கில் யுத்தகாலத்தில் பாதுகாப்பு நிமித்தமாக தமிழர்களின் இடங்கள் கைப்பற்றப்பட்டன அந்த இடங்கள் இன்று வரை மீள ஒப்படைக்கப்படவில்லை. ஒப்படைக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை இதற்கான காரணம் என்ன? என கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.
குறித்த கேள்விக்கு ரஞ்ஜித் மத்தும பண்டார பதிலளிக்கும் போது,
தற்போதும் மக்கள் நிலங்களுக்காக போராட்டங்களைச் செய்து வருகின்றார்கள் அவர்களுக்கான நிலவிடுவிப்புகளை துரிதப்படுத்துவோம். இதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது உண்மைதான்.
ஆனாலும் இதுவரையிலும் 1000 ஏக்கருக்கும் அதிகமான மக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன அதனைப் பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை. வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணிப் பிரச்சினைகள் உண்டு.
இப்போது காணி விடுவிப்புகளை அரசாங்கம் மறக்கவில்லை. இந்தச் செயற்பாட்டினை துரிதப்படுத்தப்படவேண்டும் என்ற நிலையே உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.