பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கான அழுத்தம்!

தென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது, உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

விவாதத்தின் உரையாற்றிய கொன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, “அவர்களுக்காக நாங்கள் நாட்டை நடத்தவில்லை. ஆனால், வரலாற்று ரீதியான மீறல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அது நியாயமான வழியில் இருக்க வேண்டும். மீறல்கள் தொடரக் கூடாது” என்று குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், “சிறிலங்காவில் சிறியளவிலான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அது நாம் எதிர்பார்த்ததை விட, விரும்பியதை விட மிகவும் மெதுவானது.

கொடூரமான மோதல்களுக்குப் பின்னர், நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, தனது கடப்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கம் மேலும் வேகமாக செயற்படுவதற்கு நெருங்கிய பங்காளியாக, ஒரு நேர்மையான நண்பனாக, நாங்கள் தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவோம்,” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.