நான்காம் கட்டமாக கீழடியில் அகழாய்வு!

திருப்புவனம்: கீழடியில் செப்டம்பர் 30ம் தேதி வரை நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறுமென தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின. இதுவரை நடந்த மூன்று கட்ட ஆய்வுகளில் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் 7,600 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதன்பிறகு நான்காம் கட்ட ஆய்வை தொடங்காமல் மத்திய தொல்லியல் துறை இழுத்தடித்து வந்தது. தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்ய முன் வந்து, ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து கடந்த 18ம் தேதி முதல், கீழடியில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக தொல்லியல் துறை அலுவலர்களே, கீழடியிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு வரும் செப். 30 வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மேலும் பல அரிய பழங்கால பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.50 ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயி: உரிய இழப்பீடு வழங்காததால் அகழாய்வுக்கு கீழடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலம் வழங்க மறுத்து வந்தனர். ஆனால் கொந்தகையை சேர்ந்த முதியவர் சோணை (80), தனக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார். இதுபற்றி சோணை கூறுகையில், ‘‘கீழடியில் நடந்த அகழாய்வினால் தமிழர்களின் தொன்மையான நாகரீகம், கலாச்சாரம் உலகுக்கு தெரியவந்தது. இந்த பணிகள் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது நிலத்தை ஆய்வுக்கு வழங்கினேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.