வடக்கு மாகாணசபை தேர்தலில் எனக்கு யார் வில்லன்?-மாவை!

ஆறு மாகாண சபைகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இம்முறை வித்தியாசமானதொரு கோணத்தில் இடம்பெறவுள்ளது.


இந்தத் தேர்தல் முக்கியமான சில அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ளமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அசைக்க முடியாதொரு சக்தியாக விளங்கியது.

உயர் நீதிமன்றத்தில் நீதியரசராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற சி.வி.விக்னேஸ்வரன் எவருமே எதிர்பார்க்காத வகையில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

அந்தவேளையில் இவர் வடபகுதி மக்களுக்குப் பரிச்சயம் அற்றவராகக் காணப்பட்ட போதிலும் அவர் வகித்த பதவி காரணமாக அவர் மீது ஒருவித மதிப்பும், நம்பிக்கையும் மக்களிடம் ஏற்பட்டது.

தேர்தலில் மிக அதிகமான விருப்பு வாக்குகளையும் அவர் பெற்றுக் கொண்டார். கூட்டமைப்பும் அமோக வெற்றியைப் பெற்றுக் கொண்டது.

அதற்குச் சவால் விடக்கூடிய நிலையில் எந்தக் கட்சியும் அப்போது காணப்படவில்லை.

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் வட பகுதியின் அரசியல் நிலவரத்தை ஓரளவு எடுத்துக்காட்டி விட்டன.

இந்தத் தேர்தல் இடம் பெற்றபோது கூட்டமைப்பிலிருந்து ஈ.பி ஆர் எல் எவ் வௌியேறியிருந்தது. தமிழரசுக் கட்சி,ரெலோ, புளொட் ஆகியவை மட்டுமே கூட்டமைப்பில் எஞ்சியிருந்தன.

கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவை வழங்கிய போதிலும், தமது பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தரவில்லையென்ற கோபம் கூட்டமைப்பின் மீது மக்களிடம் நிறையவே காணப்பட்டது.

எதிரணியினர் இதைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். கூட்டமைப்பு தேர்தலில் சற்றுப் பின்னடைவை எதிர்கொண்டது.

ஒட்டு மொத்தமாக அதிக ஆசனங்களை வெற்றி கண்ட போதிலும், உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியை அமைக்கக்கூடிய அறுதிப்பெரும்பான்மையை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.

யாழ்.மாநகரசபை உட்பட முக்கியமான உள்ளூராட்சி மன்றங்களில் பரம எதிரியான ஈபிடிபியின் அனுசரணையுடன் ஆட்சியை அமைக்க வேண்டிய அவல நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றில் இதையொரு கரும் புள்ளியாகவே கருத வேண்டியுள்ளது.

கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒரு வில்லனாகவே காணப்படுகின்றார்.

தம்மைப் பதவியில் அமர்த்திய கூட்டமைப்புக்கு அவர் ஒருபோதுமே விசுவாசமாக இருந்தில்லை. தேர்தல்களில் கூட்டமைப்புக்கு ஆதரவாக பரப்புரைகளிலும் அவர் ஈடுபட்டதில்லை.

ஆனால் கூட்டமைப்புக்கு எதிரானவர்களிடம் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழர்களின் எதிர்காலத் தலைவனாகத் தாமே உருவெடுக்க வேண்டும் என்ற நோக்குடன் அவர் செயற்படுவதைக் காண முடிகின்றது.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகத் தாம் நிறுத்தப்படமாட்டார் என்பதைத் தெளிவாகப் புரி்ந்து கொண்ட விக்னேஸ்வரன், மாற்றுப் பாதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்.

தனிக்கட்சியா? அல்லது கூட்டணியா? என்பதை மிக விரைவில் தாம் அறிவிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனின் நிலைப்பாடு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

இந்த நிலையில் அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் சார்பில் தாமே முதலமைச்சர் வேட்பாளர் என்பதை உறுதியாகக் கூறிவிட்டார்.

கடந்த முறை விட்ட தவறைத் தாம் மீண்டும் விடப்போவதில்லை யெனவும் அவர் உறுதியாகத் தெரிவித்து விட்டார்.

இதனால் மாவையையும், விக்னேஸ்வரனையும் தவிர வேறு முக்கியமான கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படாது விட்டால், இவர்களிருவருக்குமிடையே நேரடி மோதல் இம் பெறுமென்பதை ஊகிக்க முடிகின்றது.

கடைசி நேரத்தில் கூட்டமைப்புக்கு எதிரானவர்கள் விக்னேஸ்வரனை ஆதரிப்பதற்கு முன் வந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை.

2013 ஆம் ஆண்டு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விட்ட பெரும் தவறு, இன்று கூட்டமைப்பின் செல்வாக்கைச் சீண்டிப் பார்க்கின்றது.

விக்னேஸ்வரன் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்புவதன் மூலமாக மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்புவதற்கு முயல்கிறார். கடந்த காலங்களிலும் தமிழ் அரசியல்வாதிகள் இதைத்தான் செய்தனர்.

தெற்கைப் பொறுத்தவரையில் ஒரு தீவிரமான இனவாதியாகவே விக்னேஸ்வரன் பார்க்கப்படுகின்றார். அவர் மீண்டும் முதலமைச்சர் கதிரையில் அமர்ந்தாலும், தெற்கில் அமையவிருக்கும் அரசுகளின் ஆதரவை அவரால் பெற முடியுமா? என்பது சந்தேகத்துக்கு உரியதே.

கூட்டமைப்பைப்பினரைப் பொறுத்தவரையில் மாகாண சபைத் தேர்தல் ஒரு சத்திய சோதனையாகவே அவர்களுக்கு அமையப் போகின்றது.

மக்களிடம் சென்று அரசியல் நிலவரம் தொடர்பாக அவர்களுக்கு இருக்கின்ற சந்தேகங்களைப் போக்குவது கூட்டமைப்பின் முதன்மைக் கடமையாகும்.

கடந்த காலங்களைப் போன்று ஏனோதானோ என அவர்கள் இருந்து விட முடியாது. தேர்தல் களத்தின் நிலைமைக்கு ஏற்றவாறு தம்மைத் தயார் செய்வதற்கு அவர்கள் இப்போதே தயாராவது அவர்களுக்கு நன்மை தரவே செய்யும். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.