கேரளாவுக்கு தெலங்கானா ரூ. 25 கோடி உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.25 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து தெலங்கானா உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி வழங்கினார்.

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அணைகள் முழுவதும் நிரம்பியுள்ளன. மாநிலத்தில் சிறியதும் பெரியதுமாக உள்ள 80 அணைகள் திறக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை 350ஐ தாண்டியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் நிதி அறிவித்துள்ளன. ரூ.25 கோடி நிவாரண நிதி வழங்குவதாக தெலங்கானா அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், தெலங்கானா உள்துறை அமைச்சர் நயானி நரசிம்ம ரெட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று(ஆகஸ்ட் 19) சந்தித்து ரூ. 25 கோடிக்கான காசோலையை வழங்கினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சுத்தமான தண்ணீரை அருந்துவதற்காக ரூ. 2.5 கோடி மதிப்பில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரங்களும் கேரளாவுக்கு தெலங்கானாவில் இருந்து அனுப்பப்படவுள்ளது.

கேரளாவுக்கு தெலங்கானா மக்கள் நிதி வழங்க வேண்டும் என சந்திர சேகர ராவ் கோரிக்கை வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தொழிலதிபர்கள், கலைத் துறையினர், நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர் நிதி அளித்து வருகின்றனர். தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் எம்.பி.க்கள் ஆகியோர் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, வெள்ளத்தில் சிக்கியுள்ள கடைசி நபரை மீட்கும் வரை மீட்புப் பணிகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஏற்கனவே மீட்கப்பட்ட மக்களை மீட்கக் கோரி உதவி எண்களுக்கு அழைப்புகள் வருகின்றன. தவறான தகவல்களை அனுப்புதல் மீட்பு முயற்சிகளைத் தாமதப்படுத்தும். எனவே, உண்மையான செய்திகளை மட்டும் அனுப்ப வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.