கேப்டவுன் டெஸ்ட் – இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 245/9

தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப்டவுன் நியூலேண்டு மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிஸ்சிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.
தென்ஆப்பிரிக்கா சார்பில் டீன் எல்கர், மார்கிராம் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மார்கிராம் ரன்ஏதும் எடுக்காமல் ஹசில்வுட் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார். இருவரும் நிதானமாக ஆடினர். அம்லா 31 ரன்னிலேயே வெளியேறினார். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ் 64 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கியவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஆனாலும் மறுமுனையில், டீன் எல்கர் அபாரமாக ஆடி சதமடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 97.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 311 ரன்கள் எடுத்தது. டீன் எல்கர் 141 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தார்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் பால் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், மைகேல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பான்கிராப்ட், வார்னர் களமிறங்கினர். தென் ஆப்பிரிக்க  வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
பான்கிராப்ட் ஓரளவு தாக்குப்பிடித்து 77 ரன்கள் எடுத்தார். நாதன் லியான் 47 ரன்னும், வார்னர் 30 ரன்னும் எடுத்தனர். இரண்டாம்  நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 67 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டிம் பைன் 33 ரன்களுடனும், ஹேசில்வுட் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்னி மார்கல் 4 விக்கெட்டும், ரபாடா 3 விக்கெட்டும், பிலெண்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
ஆஸ்திரேலியாவை விட தென் ஆப்பிரிக்கா 66 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 
Powered by Blogger.