பொலிஸ் சார்ஜன் குடும்பத்திற்கு கொலை மிரட்டல்!

கம்புறுபிட்டிய - கத்தார பகுதியில் உள்ள தற்போது டுபாயில் வசிக்கும் பிரபல பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷின் சித்தி வீட்டில் இருந்து அவனது சகாக்கள் நால்வர் கைது செய்யப்பட்டதையடுத்து, சித்தி வீட்டுக்கு அருகில் வசிக்கும் பொலிஸ் சார்ஜன் ஒருவரே அது தொடர்பில் தகவல் அளித்ததாக சந்தேகித்து, அந்த சார்ஜனை குடும்பத்துடன் கொல்லப்போவதாக மாகந்துரே மதூஷ் டுபாயில் இருந்து தொலைபேசி ஊடாக மிரட்டல் விடுத்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் தங்காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஊடாகவும், குற்றவியல் விவகாரங்கள் மற்றும் திட்டமிட்ட குற்றம் தொடர்பிலான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் கீழும் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் குறித்த சார்ஜன் குடும்பத்தை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க தங்காலை பொலிஸ் அத்தியட்சர் லக்சிறி கீதால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
 கட்டுவான பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் சார்ஜன் சில்வாவுக்கே இந்த மிரட்டல் விடுக்கப்ப்ட்டுள்ளது.
 இதனைவிட கம்புறுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஓ.யூ.ஜயசுந்தர, மாத்தறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன ஆகியோருக்கும் டுபாயில் இருந்து மாகந்துரே மதூஷ் மிரட்டல் அழைப்புக்களை ஏற்படுத்தியுள்ளார்.  
எவ்வாறாயினும் பொலிஸ் அத்தியட்சர் மாரப்பன மதூஷின் அழைப்புக்கு பதிலளிக்காமல் அதனை தவிர்த்துள்ளதாக அறிய முடிகின்றது. 
இந் நிலையில் தெற்கில் பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் பொலிஸ் அதிகாரிகளின் உயிர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 பொலிஸ் சார்ஜன் சில்வாவுக்கு பல முறை தொலைபேசியில் அழைத்துள்ள மதூஷ் , ' நீ தான் எனது ஆட்களை பிடித்துக்கொடுக்க இன்பொர்மேசன் கொடுத்துள்ளாய். உன்னை நான் உயிரோடு விடமாட்டேன்.  உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்வேன். நீ எங்கு சென்றாலும் சரி,   எத்தனை வருடங்களானாலும் சரி உன்னை தேடி வந்து கொல்வேன்' என மாகந்துரே மதூஷ் மிரட்டியுள்ளார்.
 கடந்த 17 ஆம் திகதி மாகந்துரே மதூஷின் கோட்டையான கம்புறுபிட்டிய - கத்தார பகுதியில் உள்ள அவனது சித்தியின் வீட்டில் ஒழிந்திருந்த அவனது சகாக்கள் நால்வரை, கம்புறுபிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரி ஓ.யூ.ஜயசுந்தர கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக கைது செய்திருந்தார். 
பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் அவர்கள் பல்வேறு கொலைகளுடன் தொடர்புபட்டுள்ளமையும், வாழைத் தோட்டத்தில் மீட்கப்பட்ட தலைக்குரிய கொஸ்மல்லியின் கொலையும் அவர்களினாலேயே புரியப்பட்டுள்ளமையும் தெரியவந்தது. தற்போது அந்த நால்வரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
 இந் நிலையில் இந் நால்வரையும் கைதுசெய்ய, மதூஷின் சித்தி வீட்டுக்கு அருகே வசிக்கும் பொலிஸ் சார்ஜனே தகவல் வழங்கியிருப்பதாக மதூஷ் சந்தேகிக்கும் நிலையிலேயே அவருக்கும், கைதுசெய்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
 இதனைவிட குறித்த சார்ஜனை தனது உளவாளி ஊடாக  பின் தொடர்ந்துள்ள மதூஷ் அவர் போகும் , வரும் இடங்கள் தொடர்பில் தகவல்களைப்பெற்று அதனை அவ்வப்போது சார்ஜனுக்கு கூறியும் மிரட்டியுள்ளார்.
 இந் நிலையிலேயே இது தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
 ஏற்கனவே இதற்கு முன்னர், மாகந்துரே மதூஷ், தனது பாதாள உலகக் குழுவினருக்கு எதிராக செயற்படும் பொலிசாரை மிரட்டியுள்ளார்.
 போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் சுற்றிவளைப்பு பொறுப்பதிகாரி நியோமல் ரங்க ஜீவ மீது பிலியந்தலையில் மேற்கொள்ளப்பட்ட துப்பககிச் சூடும் அவரது சகாக்களால் நடாத்தப்பட்ட நிலையில், மிரிஹான விஷேட விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பெரேரா மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் தாஸ் குப்தா உள்ளிட்டோருக்கும் மிரட்டல் விடுத்த நிலையில் அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.