மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில், தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்கின்றனர். அதேபோல, பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, சனிக்கிழமை அதிகாலை
முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். 
காலையில் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. 
இரவு 11.30 மணியளவில் அங்காளம்மன் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் அலங்காரத்தில் மேளதாளம் முழங்க வடக்கு வாயில் வழியாக வந்து ஊஞ்சல்
மண்டபத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளினார்.
பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மன் தாலாட்டுப் பாடல்களைப் பாடினர். பின்னர், மகா தீபாராதனை நடைபெற்றது. 
அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சைப் பழம், தேங்காயில் கற்பூரம் ஏற்றி, அம்மனை நோக்கி காண்பித்து வழிபாடு செய்தனர்.
விழாவில், விழுப்புரம் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இந்து சமய அறநிலையத் துறை மண்டல உதவி ஆணையர் ஜோதி  உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஏ.ஆர்.பிரகாஷ், கோயில் அறங்காவல் குழுத் தலைவர் கணேசன் மற்றும் அறங்காவலர்கள்,
ஆய்வாளர் அன்பழகன், மேலாளர் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.