தேயிலைத்தூளில் சீனி கலப்படம்!

தேயிலைத் தூளுடன் சீனியைக் கலந்து விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நாடளாவிய ரீதியில், 53 தேயிலைத் தொழிற்சாலைகள் இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், இலங்கைத் தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், 80 தொழிற்சாலைகளில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனவெனவும் இவற்றில், 53 தொழிற்சாலைகளில், தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தேயிலை சபை தெரிவித்துள்ளது.

தேயிலைப் பொதிகளின் எடையை அதிகரிக்கும் நோக்கிலேயே, இவ்வாறு தேயிலைத் தூளில் சீனி கலப்படம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள தேயிலைச் சபை, இத்தகைய மோசடி நடவடிக்கைகள் காரணமாக, சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலைக்கு அபகீர்த்தி ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

சீனி கலப்படம் செய்யப்படுவதால், தேயிலைத்தூள் ஈரத்தன்மையுடன் காணப்படுவதாகவும் காலாவாதித் திகதிக்கு முன்பதாகவே, தேயிலைத் தூள்களில் பூஞ்சனம் பிடிப்பதாகவும், தேயிலை சபை தெரிவித்துள்ளது.

மேற்படி 53 தொழிற்சாலைகளுக்கும் எச்சரிக்கை விடவுள்ளதாக தெரிவித்துள்ள பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க, மேற்படி தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுமாக இருந்தால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.