பசில் ராஜபக்ச திடீரென அமெரிக்காவுக்கு பயணம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச திடீரென அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் டட்லி ராஜபக்சவின் மனைவி காலஞ் சென்றுள்ளதுடன் மரணச் சடங்கில் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எனினும் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றமைக்கான உண்மையான காரணம் அதுவல்ல எனக் கூறப்படுகிறது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவது தொடர்பில் பசில் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளுக்கு சாதகமாக இருக்கும் என்பது பசில் ராஜபக்சவின் நிலைப்பாடாகும். ரணில் பதவியில் இருப்பதன் மூலம் ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன அரசியல் ரீதியாக வலுவடையும் என்ற நம்பிக்கையில் பசில் ராஜபக்ச இருந்து வருவதாக தெரியவருகிறது.
எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இனவாத தரப்பான தினேஷ் குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் பசில் ராஜபக்சவின் நிலைப்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதுடன் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் என்பது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு எனவும் அதன் காரணமாகவே அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் கையெழுத்திடவில்லை எனக் கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக சுமார் 80 உறுப்பினர்களின் வாக்குகளையெ பெற முடியும் என கணக்கிடப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் டட்லி ராஜபக்சவின் மனைவி காலஞ்சென்றுள்ளதுடன் மரணச் சடங்கில் கலந்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Powered by Blogger.