ஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மறைந்த ஜெயலலிதா வழியில் அமமுக அணியின் தலைவர் டிடிவி. தினகரன் உண்ணாவிரதம் அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் வழியில் தாங்கள் தான் செயல்படுகிறோம் என்று நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தினகரன் இந்த உண்ணாவிரத அழைப்பை விடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
காவிரி நீரை பங்கிட்டு கொள்வதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 4 வாரங்கள் முடிவடைந்த நிலையில் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.
மாறாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறவில்லை ஒரு திட்டம் ஏற்படுத்துமாறு தான் அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு சாக்கு சொல்லி வருகிறது. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தமிழக சட்டசபையில் சிறப்பு தீர்மானம், நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிகள் போராட்டம் என எந்தெந்த வழியில் எதிர்ப்பை காட்டினாலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருக்கிறது.

தினகரன் தஞ்சையில் உண்ணாவிரதம்

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 25ம் தேதி தஞ்சாவூரில் டிடிவி தினகரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் அடைமொழி பெயரிலும், அவர் உருவம் பொறித்த கொடியை அறிமுகம் செய்து வைத்தும் புதிய அணியை தொடங்கிய நிலையில் முதன்முதலில் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. வழியை பின்பற்றுகிறோம்

ஜெயலலிதாவின் கொள்கைகளை தாங்கள் தான் பின்பற்றி வருகிறோம் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் தினகரன். இந்நிலையில் ஜெயலலிதா பாணியில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளதும் ஜெயலலிதாவின் விசுவாசமிக்க அணி தாங்கள் தான் என அதிமுகவினர் மத்தியில் ஏற்படுத்த நினைக்கிறார் என்றே பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதாவின் 80 மணி நேர உண்ணாவிரதம்

காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும் என்று இதற்கான உத்தரவாதத்தை பிரதமர் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1993ல் முதன்முதலில் சென்னை மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா உண்ணாவிரதத்தால் கோட்டையின் இருந்து நடக்க வேண்டிய பணிகள் அனைத்தும் உண்ணாவிரதப் பந்தலில் இருந்தே நடந்தது. சுமார் 80 மணி நேரங்கள் ஜெயலலிதாவின் இந்த உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில் டெல்லியில் இருந்து அப்போது மத்திய நீர்வளத்துறை அமைச்சராக இருந்த சுக்லா வந்து ஜெயலலிதாவை சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட கோரினார்.

2007ல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

மேலும் கர்நாடக அரசுடன் பேசி காவிரியில் இருந்து மத்திய அரசு தண்ணீர் திறந்துவிட்டதையடுத்து 3 நாள் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் ஜெயலலிதா. இதனைத் தொடர்ந்து காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி 2007ம் ஆண்டில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தையும் ஜெயலலிதா மேற்கொண்டார். இவ்வாறு காவிரிக்காக 2 முறை உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா வழியில் தற்போது டிடிவி. தினகரனும் உண்ணாவிரதம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.