தாயாக தாங்கியவள்...!

தொண்ணூற்றெட்டு வயதில்
அம்மாச்சி இறந்திட்டாவாம்
செய்தியை நம்ப முடியல.
போன கிழமையும் போய் வந்தேன்.
பொல்லுக்கட்டை போல இருந்தது மனுசி....
அம்மாவுக்கு அம்மாவாய் தனது
முந்தானைக்குள் அணைத்தவளின்
சேலைச் சூடு தான் அடிமனசில் கிளர்ந்தது.

தோட்டத்து வெயில்
நடுமண்டை பிளக்க
ஆண்மகன் போல பாத்தி கட்டி
தண்ணீர் கட்டுவாள் அம்மாச்சி.
சூடடிப்பாள்
நாற்று நடுவாள்
மிளகாயுடன் கத்தரி வெண்டி என
பயிர்களுடன் மினக்கெடுவாள்.

அம்மாச்சிக்கு என்னில அதிகபிரியம்.
தோட்ட வெளிக்கையும் எனக்கு
போட்டு விடுவாள் பாதணியும்
தொப்பியும் நல்லுடையும்.

அம்மாச்சிக்கு என்னைப்பெற்ற
அம்மாவை வடிவா தெரியுமாம்.
என்ர அம்மாவின் குணநலன்களை
வருவோர் போவோரிடமெல்லாம்
கதை கதையா சொல்லி
கண்ணீரை முந்தானையால் துடைப்பாள்.
என்னை அனைத்து வருடுவாள்.
ஏதோ முற்பிறவித் தொடர்பென
நெஞ்சுக்குள் கரைவேன்.- எனக்கு
ஒரு குறையும் விட்டதில்லை அந்த
வன்னியூர் அம்மாச்சி.

அம்மாச்சியை போலவே
அம்மாச்சிட பிள்ளைகளும்
கூடி உண்பர்....
கதை குறைவு....
செயல் பெரிது.....
தோட்ட மண்ணிலும் நட்ட பயிரிலும்
நாட்டம் கொண்ட மனமுடையோர்.
வம்பு தும்பு வருவதில்லை.
வந்தாலும் விடுவதில்லை.
பாசத்திற்கும் பங்கிடலுக்கும்
கற்க வேண்டும் அவர்களிடம்.

அம்மாச்சிக்கு ஒரு கெட்ட பழக்கம்
வெற்றிலை போடுவது தான்.
தாம்பாளம் நிறைய
வெற்றிலை நிறைந்திருக்கும்.
பொயிலையோடு சுண்ணாம்பும் சேர்த்து அதை உண்டிடுவார்.

அப்போது நானோ சிறுபிள்ளை
வெற்றிலையை முறிச்சு
அடிக்காம்பை தாம்பாளத்தில் வைத்தார்.
அடிக்காம்பை நானெடுத்து
மென்று கொண்டேன் மெதுவாக.-
என்ன நினைத்தாளோ
தன் விரலால் என் சொண்டை(உதடு)
சுண்டிவிட்டாள் அம்மாச்சி.
உரத்தழுதேன் நோவுகண்டு.

ஓடி வந்த பெரியண்ணா
ஒரு வார்த்தை தான் உரைத்தான்.
" நல்லது செய்யிறவை தங்களைத் திருத்த வேணும்"
சம்மாட்டியால் அடித்தது போல்
அம்மாச்சி நிலைகுலைந்தாள்.

ஓடி வந்து என்னை
அண்ணையிடமிருந்து
பறித்துக் கொண்டாள்.
யாருமே எதிர் பார்க்காததை செய்தாள்.
என் தலையில் கைவைத்து
" என்ர குஞ்சறிய இனியுந்த வெத்திலையை
தின்ன மாட்டன்" என்று
சத்தியம் செய்து நின்றாள்.
அம்மாச்சி இரக்கம் நிறைந்தவள்.

முப்பத்திரண்டு வருடமாய்
சத்தியத்தைக் காப்பாற்றியவள்
நோய் நோடியின்றி இறந்து விட்டாள்.
போன கிழமையும் போய்வந்தேன்.
பேரப்பிள்ளைகளென்று
என் பிள்ளைகளை
கொஞ்சியவள். இன்றில்லை.

அம்மாச்சி வாழ்ந்து காட்டியவள்.
இன்றுவரை வெற்றிலையை
நானும் போட்டதில்லை.
போடும் எண்ணமும் வந்ததில்லை.

என்மீது உயிரையே வைத்திருந்த
அம்மாச்சிக்கு வாய்க்கரிசி போட்டபோது
ஆகாயம் உடைந்து
தலைமீது விழுந்த உணர்வு.
மயங்கி விழுந்தேன் மண்ணில்...

மயக்கம் தெளிந்த போது
மையம் போட்டுதென சொன்னார்கள்.
பெருங்குரலாய் கதறினேன்.
என் தாயை இழந்தபோது
வன்னிக் கானகமும் கதறியழ
கதறிய கதறலாய்........

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.