பூகோள காலக்கிரம விவாதத்தில் இலங்கை விவகாரம்!

ஜெனீவாவில் நாளை நடைபெறவுள்ள பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதத்தில், இலங்கை அரசாங்கம் பங்கேற்குமென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த அமர்வில் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யவுள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 193 உறுப்பு நாடுகளினதும் மனித உரிமைகள் பதிவுகளின் காலக்கிரம மீளாய்வினை உள்ளடக்கிய தனிப்பட்ட செயன்முறையாக இந்த அனைத்துலக மீளாய்வு காணப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை இந்த ஆய்வு நடைபெறும்.
குறித்த அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐ.நா. பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்விவாதம் நாளை நடைபெறும் என்றும், இதில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்கு அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர்மட்டக் குழு ஜெனீவா சென்றுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம், கடந்த 2017ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு வருட கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள், பிரேரணையை அமுல்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைள் என்பன தொடர்பில் ஆராயும் விவாதம் எதிர்வரும் புதன்கிழமை ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெறவுள்ளது.
குறித்த அமர்விலும் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர்மட்டக் குழு கலந்துகொள்ளவுள்ளதோடு, இதில் அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை சார்பில் உரைநிகழ்த்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.