பிரேரணைக்கு சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனன கூறினார். 

இன்று கொழும்பில் உள்ள  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

மத்திய வங்கியின் திருட்டு தொடர்பாக கண்டறிந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியால் குழுகுழு ஒன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 15 பரிந்துரைகளில் 13 விடயங்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். 

இதன் காரணத்தால் அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லை என்றும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை எதிர்வரும் 02ம் திகதி அறிவிப்பதாகவும் அவர் கூறினார். 

அதேவேளை கட்சி எவ்வாறான தீர்மானம் எடுத்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மனச்சாட்சிக்கு அமைவாக தமது நிலைப்பாட்டை வௌிப்படுத்தும் உரிமை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

இணக்கப்பாட்டு அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டுமாயின் நாட்டுக்காக பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிட்டால் ஏப்ரல் மாதம் 04ம் திகதி இரவு 09.00 மணியாகும் போது இந்த இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.