பொதுமக்களின் வாகனம் எது, இராணுவத்தின் வாகனம் எது என்று குண்டுகளுக்குப் புரிவதில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்க ப்பட்டமை காரணமாக, இலங்கையின் ஜனாதிபதியால், யாழ்ப்பாணத்துக்குச் சென்று உரையாற்ற முடிகிறது எனத் தெரிவித்துள்ள, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் தலைவர் கோட்டாபய ராஜபக்‌ஷ, “இன்று அது (யாழ்ப்பாணம்), சுதந்திரமானதொரு நாடு” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு, நேற்று (25) அவர் வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, கொலைகளைப் புரிந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுவது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது பதிலளித்த அவர், “தவறெதனையும் நான் செய்யவில்லை என எனக்குத் தெரியும்; சரியானதையே நான் செய்தேன் என எனக்குத் தெரியும். என்னுடைய மனசாட்சி, அதைச் சொல்கிறது” என்று பதிலளித்தார்.

போர் என்பது, இலகுவான, நன்னம்பிக்கையுடைய விடயம் கிடையாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்களின் கொலைகள் அல்லது உயிரிழப்புகள் இடம்பெற்றன என, மறைமுகமாக ஏற்றுக் கொண்டார்.

இலங்கையில் இடம்பெற்ற போரை, தான் ஆரம்பித்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அப்போரை முடிவுக்கே கொண்டு வந்ததாகத் தெரிவித்தார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லாத நாடு, சிறந்த இடமாகவே உள்ளது எனவும் தெரிவித்தார். “படையினர் மாத்திரமன்றி, அப்பாவிப் பொதுமக்களும், பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டனர். யார் எதிரி, யார் நண்பன் என்றோ, பொதுமக்களின் வாகனம் எது, இராணுவத்தின் வாகனம் எது என்றோ, குண்டுகளுக்குப் புரிவதில்லை. ஆகவே, எனக்கு வருத்தங்கள் இல்லை. போரின் போது கூட, ஒவ்வொரு நாளும் நான் உறங்குவது வழக்கம்” என்று தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக் கட்டத்தில், பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகள் இடம்பெற்றனவா, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தொடர்புகளை ஏற்படுத்தினாரா எனவும், முன்னாள் செயலாளரிடம் கேட்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து, பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என மறைமுகமாக ஏற்றுக் கொள்வது போல, “தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேரம்பேசுவதில் எனக்கு நம்பிக்கை இருந்திருக்கவில்லை. நேரத்தை வீணாக்கும் செயற்பாடாகவே அது இருந்திருக்குமென இப்போதும் நினைக்கிறேன்” எனத் தெரிவித்தார். இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைவர், தன்னுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கவில்லை என, அவர் இங்கு குறிப்பிட்டார்.

இந்தியாவுடனான தொடர்புகளைப் பற்றி உரையாடும் போது, முன்னைய காங்கிரஸ் அரசாங்கத்துடன், சிறந்த உறவைக் கொண்டிருந்ததாகவும், நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வித்தியாசமான முறையில் இலங்கை பார்க்கப்பட்டது எனவும் தெரிவித்த அவர், இலங்கையுடனான உறவைப் பற்றிக் கருத்திற்கொள்ளும் போது, “சீனா மீது காணப்படும் தேவையற்ற அச்சத்தை” களைந்துவிட்டு, இந்தியா செயற்பட வேண்டுமெனவும் அவர் வேண்டினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.