இலங்கை-தனுஷ்கோடி வரை நீந்தி தமிழக மாணவர் சாதனை!


இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதியை 11 மணி 55 நிமிடத்தில் நீந்தி, சென்னையைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார். சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ராஜேஷ்வர பிரபு (20). சிறு வயதில் இருந்தே நீச்சல் பயிற்சியில் ஆர்வம் காட்டி வந்தார். இந்த நிலையில், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி சாதனை படைக்க எண்ணினார். இதையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் வந்து 20 கடல் மைல் தொலைவை நீந்தி கடக்க மத்திய, மாநில அரசுகளிடமும், இலங்கை அரசிடமும் அனுமதி பெற்றார். பின்னர் படகு மூலம் தலைமன்னாருக்கு சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக மீனவர்கள், படகு இயந்திர பழுது நீக்குபவர் மற்றும் பயிற்சியாளர் விஜயகுமார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டோர் ஒரு விசைப்படகு மற்றும் நாட்டுப் படகில் தேவையான உணவுகள் மற்றும் உபகரணங்களுடன் ஒரு குழுவாக சென்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு தலைமன்னாரில் இருந்து கடலில் ராஜேஷ்வர பிரபு நீந்தத் தொடங்கினார். அவருக்கு சர்வதேச கடல் எல்லை வரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் தொடர்ந்து 11 மணி 55 நிமிடங்கள் கடலில் நீந்தி பிற்பகல் 2.55 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனையை சென்றடைந்த அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோன்று கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன்முதலாக 1954-ம் ஆண்டு நீந்தி கடந்தார். தொடர்ந்து 5.4.1966-ல் கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக். ஜலசந்தியை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலும் நீந்தி கடந்தார். 12.4.1994-ல் பன்னிரண்டே வயதான குற்றாலீசுவரன் பாக். ஜலசந்தியை நீந்திக் கடந்தார். இதற்கு அடுத்து ராஜ ஈஸ்வர பிரபு தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Powered by Blogger.