விலகிய 16 பேருக்கும் மைத்திரிக்கும் விஷேட கலந்துரையாடல்!

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 16 பேருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

அந்த குழுவை அங்கத்துவப்படுத்தும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டம் மற்றும் மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் அந்த பதவிகளில் இருந்து விலக வேண்டும் என அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய 16 உறுப்பினர்களும் தீர்மானம் ஒன்றை எட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அந்த குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சந்திம வீரக்கொடி மற்றும் லக்ஷ்மன் வசந்த பெரேரா ஆகியோர் லண்டனில் வைத்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் இன்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரி.பி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.  பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த வாரம் லண்டன் சென்றிருந்த நிலையில், அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை.

இந்தநிலையில் இன்று ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.