புத்தாண்டை முன்னிட்டு இலங்கை சிறையிலிருந்து 19 மீனவர்கள் விடுதலை!

 புத்தாண்டை முன்னிட்டு இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் 19 பேரை இலங்கை அரசு நேற்று விடுதலை செய்தது. இலங்கை கடற்படையினரால் கடந்த சில மாதங்களாக கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை விடுவிக்க மீனவர்களின் உறவினர்கள் மத்திய, மாநில அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இலங்கை அரசு, 19 தமிழக மீனவர்களை நேற்று விடுதலை செய்தது. சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு பரிந்துரை செய்ததை தொடர்ந்து, கொழும்பில் உள்ள இலங்கை அரசின் சட்டமா அதிபர் அலுவலகத்திலிருந்து மீனவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு நேற்று மன்னார் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து வவுனியா சிறையில் இருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரையும் விடுவித்து மன்னார் நீதிமன்றம் நேற்று மாலை உத்தரவிட்டது. விடுதலையான 19 மீனவர்களும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதுபோல் யாழ்ப்பாணம் சிறையில் இருக்கும் புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரும், சில தினங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.