பிரதமருக்கு எதிராக வாக்களித்த 6 அமைச்சர்களுக்கு பதிலாக வேறு அமைச்சர்கள்!

அமைச்சரவை முழுமையாக மாற்றியமைத்து யதார்த்தபூர்வமாக அமைச்சு பொறுப்புகளை வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். ஒரே தலைவர், ஒரே செயற்திட்டம் ,ஒரே அரசாங்கம் என்ற அடிப்படையிலே அரசாங்கம் இதன் பின்னர் செயற்படும் என்று குறிப்பிட்ட அவர், பிரதமருக்கு எதிராக வாக்களித்த 6 அமைச்சர்களுக்கு பதிலாக வேறு சு.க அமைச்சர்கள் நியமிக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர், 14 ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை மாற்றம் நிகழும் எனவும் 2015 வாக்குறுதிகளை முன்னெடுக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறினார்.
பல அமைச்சுக்கள் யதார்த்தபூர்வமாக இணைக்கப்படும். அமைச்சுக்களின் கீழ் இருக்கும் நிறுவனங்களும் அதற்கமைய மாற்றப்படும். ஜனாதிபதியின் செயலாளரும் பிரதமரின் செயலாளரும் இதனை தயாரித்து வருகின்றனர். புதிய அமைச்சரவையாக  ஐ.தே.க மற்றும் சு.க அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த அமைச்சர்களுடன் ஒன்றாக செயற்பட முடியாது என்பதை நாம் அறிவித்துள்ளோம்.
இருகட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்கும் யோசனையை ஜனாதிபதியன்றி பிரதமர் தான் முதலில் முன்வைத்தார்.நல்லாட்சி என்பது நாட்டுக்கு நல்லது.ஆனால் அரசியல் வாதிகள் தமது நலனை கருத்திற் கொண்டு செயற்படுவதால் நல்லாட்சிக்கு குந்தகம் ஏற்படுகிறது.
புதிய அமைச்சரவை யாப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது போன்று 45 ஆகவே இருக்கும். சு.க அமைச்சர்கள் அமைச்சரவையை பகிஷ்கரிக்கவில்லை. கட்சி முடிவு ஒன்றை எடுக்கும் வரையே அமைச்சரவைக்கு வரவில்லை. அவர்களின் முடிவு கிடைத்ததும் அமைச்சரவை மாற்றம் நிகழும்.
கடந்த அமைச்சரவையில் தற்போதைய நிலைமை பற்றி ஜனாதிபதி விளக்கியிருந்தார். அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை. சபாநாயகர் உட்பட 148 எம்.பிக்களின் ஆதரவு எமக்கிருக்கிறது.
சமூகத்திற்கு முக்கியமான விடயங்களின் போது ஜே.வி.பியும் ஆதரிக்கும்.
புதிய அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் அமைச்சர்களும் எம்.பிக்களும் ஒருவரை ஒருவர் விமர்சிக்காது குறைகூறாது ஒன்றுபட்டு எமது இலக்குகளை அடைய ஒற்றுமையாக செயப்பட இருக்கிறார்கள் என்றார்.
Powered by Blogger.